Vijay Assembly speech 
தமிழ்நாடு

“குற்றவாளி யாராக இருந்தாலும்.." சட்டப்பேரவையில் முதல்வர் பேசிய முக்கிய பதிலுரைகள் ! விளக்கம் முதல் அதிரடி நடவடிக்கை வரை

யாராக இருந்தாலும் காவல்துறையினரின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் தலையீடு இருக்கக்கூடாது

Vinvizhi Leninton

3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டப்பேரவை கூடியது, இதில் தமிழக முதல்வர் தன்னுடைய பதிலுரையை வழங்கினார். ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் சாலைகள் அமைப்பதிலோ, தொழிற்சாலைகள் வருவதாலோ தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் அந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாக, பயமில்லாமல் வாழ்கிறார் என்பதில்தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது என்று தனது உரையை தொடங்கினார் முதல்வர் விஜய். மேலும், சட்ட ஒழுங்குகள் சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடுகள் வரும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், சுற்றுலா துறை வளரும் , பெண்கள் மற்றும் இளைஞர்கள் சுதந்திரமாக வேலைவாய்ப்புகளில் பங்கேற்பார்கள் எனவே காவல்துறை என்பது குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல சமூக அமைதி, முதலீடு உள்ளிட்டவற்றிற்கு அடித்தளமாக அமையும் அமைப்பு என்று பேசினார்.

சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பனாகவும், சட்டத்தையும், பிறரின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு எதிரி என இந்த இரு பண்புகளை கொண்டவராக இருக்க வேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டார். எந்தவித இடையூறும் இன்றி காவலர்கள் தங்களது பணிகளை செய்ய இந்த அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், அமைச்சர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் காவல்துறையினரின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் தலையீடு இருக்கக்கூடாது என்று கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக முதல்வர் கூறினார்.

"குற்றவாளி யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்று பேசினார். மேலும், எதிர்க்கட்சியினர் உள்நோக்கத்துடன் சட்டப்பேரவையில் மக்களின் பாதுகாப்பு குறித்து பேசியிருந்தாலும், அதனை மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த அரசு ஏற்று செயல்படும் என்று முதல்வர் பேசினார். மேலும், காவல்துறை என்பது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக்கூடாது, அது மக்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும், குற்றம் நடந்துவிட்டது என்பதற்காக மட்டுமே ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று மதிப்பிப்பிட முடியாது என்றும் தனிப்பட்ட குற்றத்திற்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் விஜய். மேலும், குற்றம் நடந்தால் அதன் பொறுப்பை அரசின் மீது சுமத்தி ஒதுங்கிவிட முடியாது என்றும் ஒவ்வொரு பிரச்சனைக்கு பின்னாலும் பல காரணங்கள் இருக்கலாம் என்று காரணங்களை வரிசைபடுத்தினார் முதல்வர்.

மேலும், கடந்த காலத்தில் சட்டத்தின் மீது பயமில்லாத தன்மை, சிலரின் ஆதிக்கத்தின் கீழ் காவல்துறை செயல்பட்டதும், போதை கலாச்சார வளர்ச்சி, சமூக கட்டுப்பாடு குறைதல், சமூக வலைதளத்தின் தாக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது குற்றங்கள் நடப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், காவல்துறை தங்கள் எல்லைக்குட்பட்ட மக்களோடு நெருக்கமாக உறவில் இருக்கவேண்டும் என்றும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வார்டிலும் உள்ள பிரச்சனைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், தற்போது டிஜிட்டல் உலகம் என்பதால், அதிலும் அதிகப்படிய குற்றம் நடப்பதாகவும், சைபர் குற்றங்கள் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனை தடுக்க காவல்துறையினரின் தொழில் நுட்பத்திறனை வளர்ப்பது மட்டும் போதாது என்றும் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை மற்றும் முதியவர்களுக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த அடிப்படை கல்வி வழங்கப்படுமென்று குறிப்பிட்டார். ஒரு குற்றவாளியை கைது செய்வது காவல்துறையின் வெற்றி என்றால் அந்த குற்றத்திற்கு 1000 பேர் இரையாகாமல் தடுப்பது அதை விட பெரிய வெற்றி என்று பேசினார்.

மேலும், சமீபத்தில் கோவையில் நடந்த அமுதன் கொலை மற்றும் சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடந்த தனுஷ் குமார் கொலை ஆகியவற்றை குறித்து முதல்வர் பேசினார். அதில் குற்றத்தில் ஈடுபட்ட 36 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சட்டம் தனது கடமையை சமரசமின்றி செய்து வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றத்தின் முன் நிற்கவைத்து தண்டனை வழங்கப்படும் என்றும் ஆனால், இந்த அரசு வெறும் தண்டனையை மட்டும் பெற்றுத்தரும் அரசாக இல்லாமல், மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களை வழிநடத்தவும் அவர்களோடு இணைந்து செயல்படுவது இந்த அரசின் நோக்கமாகும் என்று பேசினார். மேலும், "சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுவதற்கு யார் காரணம்?" என்று கேட்ட முதல்வர், யார் மீது பழிபோடலாம்? என்று அரசியல் ரீதியாக சிந்திக்கும் எதிர்க்கட்சியினருக்கு இணையாக தானும் 2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றங்களை தரவுகளோடு கூறிவிட்டு ஒதுங்க தனது மனம் இடம் தரவில்லை என்றும் கீழான அரசியலை செய்ய விரும்பவில்லை, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று பேசினார். மேலும், போதை கலாச்சாரம் என்று ஒற்றை வார்த்தையை கூறி தப்பித்து கொள்வது சிறந்த தலைமை பண்பு அல்ல என்றும் அதனை தவெக அரசு செய்யாது என்றும் அவர் பேசினார். இதுபோன்ற சம்பவங்களால் ஒரு மாணவனின் உயிர் போவது மட்டுமின்றி அது சம்பந்தப்பட்ட அனைவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும், குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்பதை மாணவர்கள் உணரவில்லை என்றால் அவர்களுக்கு இதுவரை சரியான பாதை வகுத்து தரவில்லை என்பதுதான் உண்மை என்று கூறியதோடு, இந்த குற்றங்கள் நடக்க 100 நாட்களான இந்த அரசா காரணம்? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

தாக்கிய மற்றும் தாக்கப்பட்ட மாணவர்களின் அண்ணனாக, குடும்ப உறுப்பினராக சிந்திப்பதாக முதல்வர் கூறினார். இந்த விவகாரத்தை போதைப்பொருள் கலாச்சாரம் என்ற ஒற்றை வார்த்தையில் கொச்சைப்படுத்தி கடந்துவிடாமல் பொறுப்புடன் செயல்பட்டு மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கும் என்று முதல்வர் பேசினார். தான் பதவியேற்ற முதல்நாளே ஊழலற்ற, வெளிப்படையான அரசாக அமையும் என்று கூறியதை நினைவுபடுத்தி, அரசு ஊழியர்கள் பலர் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவதை பாராட்டியதோடு, சில ஊழியர்கள் சுயலாபத்திற்காக லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று பேசினார்.

மேலும், அரசு ஊழியர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும்போது அது அவர்களை மட்டுமின்றி அவர்களது குடுபத்தினரையும் பாதிக்கும் என்று கூறியதோடு, கடைமை மற்றும் நேர்மையை கடைபிடித்து எந்தவித அவப்பெயரையும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்படுத்தாதவண்ணம் இருக்கவேண்டும் என்று பேசினார். மேலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் இந்த அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்று பேசினார். ஊழல் தடுப்பு அமைப்புகள் எந்தவிதமான தயக்கமும் இன்றி தங்களது நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் பேசினார். கடந்த ஆட்சி காலத்தால் தற்போது போதைக்கலாச்சாரம் வேரூன்றி இருப்பதாகவும் அதனை ஒழிப்பதில் தவெக அரசு முடிவிற்கு கொண்டுவருவதில் முனைப்பாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். இதற்காக போதைப்பொருள் தடுப்பு படை அமைக்கப்பட்டதாகவும் அவற்றை கொண்டு ஒரு சில கிளைகளைத்தான் வெட்டியிருப்பதாகவும், ஆனால் போதை என்கிற முழு மரத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டவேண்டும் என்றும், இது 100 நாளில் நடக்கும் விஷயம் இல்லை வேண்டும் அவர் குறிப்பிட்டார்.

37 மாவட்டங்கள் மற்றும் 9 நகரங்களில் இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். NDPS சட்டத்தின் கீழ் 3263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 4846 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 159 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். சென்னை மாநகரத்தில் NDPS சட்டத்தின் கீழ் 330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 600 கிலோ கஞ்சா 65 ஆயிரத்து 748 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதற்கான விற்பனை மற்றும் கடத்தல் வலையமைப்புகள் முறியடிப்பதோடு குறிப்பாக இளைஞர்களை போதையில் இருந்து பாதுகாப்பதே இந்த அரசின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளதாக முதலவர் கூறினார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து உறுப்பினர்களும் கவலை தெரிவித்துள்ளதாகவும், இரண்டு பெண் தலைவர்களை கொள்கைத்தலைவர்களாக இந்த அரசு கொண்டிருப்பதாகவும், பெண்களை தங்கையாக, தாயாக, அக்காவாக, தோழியாக பார்க்கக்கூடிய அரசு என்றும் பெண்களை பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவது அரசின் கடமை என்றும் முதல்வர் குறிப்பிட்டார். குற்றம் நடைபெறுவதற்கு முன்பு தடுப்பதே இந்த அரசின் முக்கிய கடமை என்று கூறியதோடு, அதற்காக சிங்கப்பெண்கள் அதிரடி படை உருவாக்கப்பட்டு 2546 புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டதோடு, 327 நான்கு சக்கர வாகனங்கள் 109 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் 357 கோடிஇதில் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.

காவல்நிலைய மரணங்கள் குறித்து முதல்வர் பேசியதோடு, இனி இதுபோன்ற மரணங்கள் நிகழுமாயின் அதுகுறித்து முழுமையான விசாரணை செய்யப்படும் என்றும் காவல்துறை பணியில் ஏற்படும் நீண்ட நேர பணிச்சுமை, மன அழுத்தம், போதிய ஓய்வு இல்லாமை மற்றும் பணி சூழல் போன்ற காரணிகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். காவல்துறை பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதன் காரணமாக பணிச்சுமை அதிகரிப்பதாகவும் அதனால், காவல்துறை பணியிடங்கள் துறை வாரியாக, மாவட்டங்கள் வாயிலாக கணக்கிட்டு முன்னுரிமை அடைப்படையில் நிரப்பப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். மேலும், தீயணைப்பு மாற்றும் மீட்பு துறையை நவீனமயமாக்குவது குறித்தும் முதல்வர் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்