மதுராந்தக தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரான மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் இன்று (செப் 25) மக்கள் மத்தியில் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்தார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்னர், தனது பதவியினை ராஜினாமா செய்து தவெக-வில் மரகதம் குமரவேல் இனைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளானது. மேலும், இது 'குதிரை பேரம்' என பலராலும் விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தவெக சார்பில் மீண்டும் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பங்கேற்ற இந்த பரப்புரை கூட்டத்திற்கு வெறும் 5000 மக்கள் மட்டுமே அனுமதித்ததாகவும், QR code வைத்திருந்தால்தான் உள்ளே அனுமதி என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், மக்கள் முதல்வர் விஜய்யை காண ஆரவாரத்தோடு உற்சாகமாக கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தின் போது, ராஜ்மோகன், என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசிய பின்பு, தவெக-வின் வேட்பாளரான மரகதம் குமரவேல் பேசினார். இவர்களை தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக சாடி பேசினார். திமுக-வை மட்டுமின்றி அதிமுகவையும் காட்டமாக விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "முதல்வர் விஜய்யும் கடன் வாங்குகிறாரே?" என்று திமுகவினர் உட்பட சிலர் பேசுவதை குறிப்பிட்டு தனது விளக்கத்தை மேடையில் கொடுத்தார். அதில், பதவியேற்ற அன்று, தான் அவகாசம் கேட்டதாகவும், கடன் மேலே கடன் வாங்கி நிலைமை மோசமாக இருப்பதாலும், நிதி நெருக்கடி இருப்பதாகவும் கூறி அவகாசம் கேட்டதை மேடையில் குறிப்பிட்டார்.
அப்போதுகூட தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய முயற்சித்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "விஜய் கூட கடன்தான் வாங்குறாரு" என்று திமுகவினர் கூறியதை குறிப்பிட்டு அதற்கு பதிலளிக்கும் விதமாக, "ஆமா.. நான் கடன்தான் வாங்குறேன். கொள்ளையடிப்பதற்காக இல்லை; மக்களுக்கு நல்லது செய்வதற்காக; கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செய்யவேண்டும் என்பதற்காக" என்று குறிப்பிட்டு பேசினார்.
மேலும், 6 சிலிண்டர் கொடுப்பதாக தான் கூறியதாகவும், இப்போதைய நிலைமையில் தன்னால் 3 தான் கொடுக்க முடியும் என்றும் அதனை உடனடியாக நடைமுறைபடுத்த கூறியதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். ஆனால், அப்போது கூட எதிர்க்கட்சியினர், 6 கொடுப்பதாக கூறிவிட்டு 3 தான் கொடுக்கிறார் என்று கூறியதோடு மக்களை 'ஏத்தி விடுவதுபோல்' அவர்களிடம் கேட்பதாக முதல்வர் மேடையில் குறிப்பிட்டு பேசினார்.
இந்த விவகாரத்தில் மக்கள் "பொறுங்க சார்.. பொறுங்க. ஏன் பதறுறீங்க?, ஏன் கதறுறீங்க?. நம்ம வீடு புள்ள விஜய் குடுக்கும். நீங்க பதறாதீங்க, நீங்க போங்க" என்று மக்கள் கூறி அனுப்பியதாகவும் அவர் மேடையில் பேசும்போது குறிப்பிட்டார்.
அடுத்ததாக கட்டணமில்லா பேருந்து வசதியை குறிப்பிட்டு பேசிய அவர், நடத்துநரோடு சேர்ந்து பெண்களும் விசிலடித்ததாக மேடையில் குறிப்பிட்டு பேசினார். அந்த செய்கையில் திமுகவும் மற்றும் பலரும் வெடவெடத்து போனதாக அவர் குறிப்பிட்டு மக்கள் மத்தியில் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்