தோல்வி அடைந்த தொகுதிகளில் 'பல்ஸ் பார்க்கும்' முதல்வர்; இடைத்தேர்தலில் ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்.. சவாலாகும் 2 இடங்கள் என்ன? 
தமிழ்நாடு

தோல்வி அடைந்த தொகுதிகளில் 'பல்ஸ் பார்க்கும்' முதல்வர்; இடைத்தேர்தலில் ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்.. சவாலாகும் 2 இடங்கள் என்ன?

விராலிமலை, பெருந்துறை அடுத்தது அம்பாசமுத்திரம் செல்ல திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

Antony Ajay R

முதலமைச்சர் விஜய் அவரது ஆய்வு பயணங்களைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க புறப்பட்டுள்ளார். விராலிமலையில் தொடங்கியவர் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முகத்தைக் காட்டுகிறார். அடுத்ததாக அம்பாசமுத்திரம் கரூர் என அவரது பயணம் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 5 தொகுதிகளான அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை, விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கில் 4 தொகுதிகள் அதிமுக வெற்றி பெற்றவை. அந்த வேட்பாளர்கள் இப்போது தவெகவில் இணைந்துவிட்டதானால் வெற்றி பெறுவதை முதல் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

அதன்பகுதியாகதான் நலத்திட்ட உதவிகள் வழங்கச் சென்று பல்ஸ் பார்க்கிறார் முதலமைச்சர்.

இன்று முதலமைச்சர் முகாமிட்டிருக்கும் பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகள்தான் தவெக 3வது இடம் பெற்ற மிகவும் சவாலாக இருக்கக் கூடிய தொகுதிகள்.

கரூர் மற்றும் விராலிமலையில் தவெக இரண்டாம் இடம் மற்றும் திமுக மூன்றாம் இடம் பிடித்தன. திருச்சி கிழக்கில் விஜய் 50.07 விழுக்காடு வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு திமுகவின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுதியில் தனிக்கவனம் செலுத்த ஆயத்தமாகி வருகிறது தவெக.

மறுபக்கம் விராலிமலை தொகுதியில் 1,05,773 வாக்குகள் பெற்று 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் சி. விஜயபாஸ்கர். இரண்டாம் இடம் பெற்றிருந்தாலும் தவெக - அதிமுக இடையிலான வாக்குவித்தியாசம் மிகப் பெரிதாக இருக்கிறது. விஜய்யின் 'கரிஷ்மா' மட்டுமே இந்த இடைவெளியை நிரப்புவது கடினமானது என்பதை மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காட்டின.

ஆனால் விஜயபாஸ்கர் 2011ம் ஆண்டு முதல் அந்த தொகுதியில் தோல்வியே காணாமல் வெற்றி பெற்று வருகிறார். அதனால் தவெக விஜயபாஸ்கரின் செல்வாக்கை நம்பி களமிறங்கும் சூழல் உள்ளது.

கரூர் அல்லது திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்வி நீண்டகாலமாக உள்ளது. செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி கரூர். அவர் கோவை தெற்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார். அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் கரூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற வைப்பதாக செந்தில் பாலாஜி உறுதியளித்திருக்கிறார் என்ற செய்தி வந்திருக்கிறது.

கரூரில் விஜய்யின் பிரசாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் 32.15 விழுக்காடு வாக்குகள் பெற்று நூழிலையில் வெற்றியை நழுவவிட்டது.

மீண்டும் இடைத்தேர்தல் வந்தால் தவெக எளிதாக வெற்றிபெரும் சூழலே நிலவுவதனால், செந்தில் பாலாஜி மீதான நம்பிக்கையில் ஸ்டாலின் இங்கே களமிறங்குவாரா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது தமிழக வெற்றிக் கழகத்துக்கு இன்றியமையாததாக உள்ளது. திமுக, அதிமுக கட்சிகளும் அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியடைவது கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதனால் முழு வீச்சில் இறங்க இருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.