மருத்துவ படிப்பை மட்டுமே கனவாக கொண்டு ஆண்டு முழுவதும் படித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. அனிதா முதல் அடுத்தடுத்த மாணவர்களின் உயிரிழப்புகள் வரை, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இத்தகைய சூழலில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் விஜய், தற்போது மத்திய அரசின் உயர்மட்டக் குழுவிடமும் தனது எதிர்ப்பை மீண்டும் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதம் மூன்றாவது நாளாக நடைபெற்றபோது, அதாவது கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். மருத்துவ மாணவர் சேர்க்கையை நீட் தேர்வு அடிப்படையில் நடத்தாமல், மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்றும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பின்னர் பாஜக மற்றும் அதிமுகவை தவிர மற்ற காட்சிகள் இந்த நீர்மானத்திற்கு ஆதரவளித்த நிலையில் இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில், ஒன்றிய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான நந்தன் நிலேகனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பணிக் குழுவினர் இன்று (நவம்பர் 4, 2026) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யைச் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பின்போது, உயர்கல்விச் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் அல்லது நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்பதை முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் சுட்டிக்காட்டி, மாநில அரசின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி, பிற உயர்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் நீட் மற்றும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசின் உயர்மட்டக் குழுவிடம் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது.
ஏற்கெனவே நீட் தேர்வுக்கு எதிராகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழ்நாடு அரசு, தற்போது நந்தன் நிலேகனி தலைமையிலான குழுவிடமும் தனது எதிர்ப்பைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை முதல்வர் விஜய் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.