"முதல்வர் விஜய்க்கு 'புடவை' போர்த்தப்பட்டதா?" ஆன்லைனில் குவிந்த கேலிகள்.. நயினார் நாகேந்திரன் விளக்கம்! 
தமிழ்நாடு

"முதல்வர் விஜய்க்கு 'புடவை' போர்த்தப்பட்டதா?" ஆன்லைனில் குவிந்த கேலிகள்.. நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சிலர் இந்த விவகாரத்தை கேலிப்பொருளாகவும் சித்தரித்து வருகின்றனர். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

மாலை முரசு செய்தி குழு

நேற்றைய தினம் பிரதமர் மோடி மெட்ரோ திறப்புக்காக சென்னை வந்திருந்தார். அப்போது முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே முதலமைச்சருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பொன்னாடை அணிவித்தார். அந்த பொன்னாடை வழக்கத்தை விட நீளமாக இருந்ததால் பலரும் பாஜக தலைவர் முதலமைச்சருக்கு புடவை அணிவித்து மரியாதை செலுத்தியதாக தகவல் பரப்பினர்.

சிலர் இந்த விவகாரத்தை கேலிப்பொருளாகவும் சித்தரித்து வருகின்றனர். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர், "ஊடகங்களுக்கும் மீடியாவுக்கும் சொல்லுகிறேன், தயவுசெய்து அதை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒரு கட்சி தலைவர் என்ற முறையில் முதலமைச்சருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். தயவுசெய்து யாரும் கொச்சைப்படுத்தாதீர்கள்." எனக் கேட்டுக்கொண்டார்.

மேடையில் அமர்ந்ததால் சர்ச்சை

முன்னதாக மெட்ரோ திறப்பு விழாவில் நயினார் நாகேந்திரன் மேடையில் அமர்ந்தது சர்சையானது.

இது குறித்து தவெக அமைச்சர் நிர்மல் குமார், "ஒன்றிய அரசு நடத்திய நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. போன்ற எந்தவொரு மக்கள் பிரதிநிதித்துவப் பொறுப்பிலும் இல்லாத கட்சிச் சார்ந்த நபர் எந்தப் புரோட்டோகாலின் அடிப்படையில் மேடையில் அமர வைக்கப்பட்டார் என்று தெரியவில்லை. இது ஒரு தவறான மற்றும் மோசமான முன்னுதாரணம்." எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நயினார் நாகேந்திரன், "மின்சாரத்துறையில் உள்ள பிரச்சனைகளை கவனியுங்கள். இதுதான் நாட்டுக்கு முக்கியமா" எனக் கேள்வி எழுப்பி, பதிலளிக்காமல் சென்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்