Pushpavanam Kuppusamy controversy 
தமிழ்நாடு

"பாடகரா இருந்தா.. வந்த வேலைய பாக்குறது நல்லது" - புஷ்பவனம் குப்புசாமி விவகாரத்தில்.. கறாராக பேசிய அமைச்சர் மரிய வில்சன்!

என்னை பொறுத்தாதவரை அத எல்லாம் அவாய்ட் பண்ணனும். இதுயெல்லாம் தேவையில்லாத விஷயங்கள் நமக்கு. பாடகரா இருக்கட்டும்.. வந்த வேலையை பார்க்குறது நல்லது.

Vinvizhi Leninton

புஷ்பவனம் குப்புசாமி முருகனை, முதலமைச்சருடன் உடன் ஒப்பிட்டு பாடியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், "இதெல்லாம் தேவையில்லாதது.. பாடகரா வந்தா.. வந்த வேலைய பாக்குறது நல்லது" என்று அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது கவனத்தை பெற்றுள்ளது.

திருச்செந்தூரில் கடந்த 15ம் தேதி கந்தசஷ்டி நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி முருகன் வதம் செய்யும் காட்சிகளையும் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஏராளமான பாடகர்கள் வர்ணனை செய்வதற்கும், முருகனின் புகழ் பாடுவதற்கும் அழைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு வந்திருந்தனர்.

அப்போது பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, 'முதலமைச்சர் விஜய்யை போல்' என்று முருகனுடன் முதல்வரை ஒப்பிட்டு பேசியதும், "முதல்வருக்கு அரோகரா", "அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா" என்று எழுப்பிய கோஷங்களும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது, பக்தர்களை அதிருப்தியை ஆழ்த்தியதுடன், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாளி பலரும் இதற்கு எதிர்ப்பு குரல்கள் எழுப்பி வந்தனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவிதனர்.

விளக்க வீடியோ:

இந்நிலையில், புஷ்பவனம் குப்புசாமி தரப்பில் இருந்து விளக்க வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அவர், "நீங்கள் திட்டுகிற அளவிற்கு நான் எதுவும் படவில்லை. திட்டுவதற்கு உரிமை இருக்கிறது.. பாராட்டுகிற நீங்கள் தானே திட்டுகிறீர்கள். ஆனால், எதற்கு திட்டுகிறோம் என்று தெரிந்துகொண்டு திட்டுங்கள். நான் பாடிய பாடலில் எந்த குறையும் இல்லை. 'நம் தமிழக முதல்வர் போல்' அங்கே கமா இருக்கிறது. 'நம் தமிழக முதல்வர் போல்' வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால்.. யார் வேண்டிக்கொண்டால்? நம் தமிழக முதல்வர் போல் வேண்டிக்கொண்டால்.. யாரிடம் வேண்டிக்கொண்டால்?.

வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு. இப்பொழுது புரிகிறதா?. யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு?, நம் தமிழக முதல்வர் வேண்டிக்கொண்டது போல் நாமும் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லியிருக்கிறேன். வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டி கேளுங்கள். வெற்றி உண்டு பாருங்கள். இப்பொழுது புரிகிறதா?; அவரை நான் சாட்சியாக சொல்லியிருக்கிறேன். இதில் என்ன குறை இருக்கிறது. முருகனுக்கு ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறேன். தமிழறிந்த நான் பிழை செய்வேனா?" என்று அவர் அந்த விளக்க வீடியோவில் பேசியிருக்கிறார். மேலும், தான் சாட்சியாகத்தான் முதல்வரை குறிப்பிட்டதாகவும் புஷ்பவனம் குப்புசாமி குறிப்பிட்டுள்ளார். 'முருகனுக்கு நிகர் யாரும் கிடையாது' என்றும் அவர் அந்த காணொளியில் பேசியிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "இதுகுறித்து ஏற்கனவே பாடகர்கள் விளக்கத்தை கொடுத்திருக்காங்க. நானும் அவங்ககிட்ட பேசும் போது அதற்கான விளக்கத்தை எல்லாம் சொன்னாங்க. இனிவரும் காலங்களில் கவனமாக செயல்படுவோம் என்றும் சொன்னாங்க. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் சரி, நாங்களும் சரி, இது போன்ற புகழ் பாடுறத விரும்புறது கிடையாது. இதை நாங்க பாடகர்கிட்டயும் சொல்லியிருந்தோம்" என்ற விளக்கத்தினையும் கொடுத்திருந்தார்.

மரிய வில்சனின் கருத்து:

தற்போது, அமைச்சர் மரிய வில்சன் இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். RK நகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் புயல் காரணமாக கடலில் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மரிய வில்சனிடம், புஷ்பவனம் குப்புசாமியின் சர்ச்சைக்குரிய பாடல் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "என்னை பொறுத்தாதவரை அத எல்லாம் 'அவாய்ட்' பண்ணனும். இதுயெல்லாம் தேவையில்லாத விஷயங்கள் நமக்கு. நிறைய விஷயங்கள் நாம பண்ணவேண்டியது இருக்கு. அது பாடகரா இருக்கட்டும்.. வந்த வேலையை பார்க்குறது நல்லது. கோவிலுக்கு எந்த வேலையை பார்க்கணுமோ அந்த வேலையை பார்த்தா எல்லாருக்குமே நல்லது" என்று வெளிப்படையாக இந்த விவாகத்தில் பதிலளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.