

திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என எழுப்பிய கோஷத்திற்கு இடையில், முதல்வர் விஜய்க்கு அரோகரா, இந்து அறநிலைய துறை அமைச்சருக்கு அரோகரா என கோஷம் எழுப்பப்பட்டது. இந்த விழாவில், பாடகர் வேல்முருகன் மற்றும் தமிழக இயல் இசை நாடக மன்ற தலைவரும் பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு கடவுளுக்கு துதி பாடி வர்ணனை செய்தனர். அங்கு முதல்வர் மற்றும் அமைச்சர் ரமேஷ்-க்கும் ‘அரோகரா’ என்று கோஷமிட்டது, அங்குள்ள பக்தர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுளுக்கு எழுப்பும் கோஷத்தை அரசியல் தலைவர்களுக்கு எழுப்புவதா? என்று பக்தர்களும் மற்றும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்த பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “கடவுளைப் போற்றும் அரோகரா கோஷம்... அரசியல் தனிநபர் துதிக்கானதா?” என்று கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். முருகப்பெருமானைப் போற்ற வேண்டிய புனிதமான அரோகரா கோஷம், அரசியல் தலைவர்களின் புகழ் பாடுவதற்கு பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என்றும் “லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் முழங்கும் இறைநாமம் தான் கிடைத்ததா? ஆன்மீகமும் அரசியலும் வெவ்வேறானவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? என்றும் கேள்விகளால் துளைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த, வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் பேசியதாவது திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா நடக்கும் போது அரசு சில சொற்பொழிவாளர்களை அனுப்பி இருந்தது. விஜய், அமைச்சர் ரமேஷ் ஆகியோருக்கு அரோகரா என வேல்முருகன் சொன்னது கடும் கண்டனத்துக்குரியது. அனைத்து மதத்தினருக்கு சமமான ஆட்சி என கூறும் போது அனைவருக்கும் சமமான உரிமையை தர வேண்டும். ஆனால் அறநிலையத்துறை சார்பில் உறுப்பினராக உள்ளவர் நேரடி வர்ணனை செய்த போது நடந்தது தவறான விஷயம். இதை மன்னிப்பு கேட்டு கடந்து போக முடியாது. இதை முதலமைச்சர் கண்டித்து இனி நடக்காமல் தடுக்க வேண்டும். அறநிலைய துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த முறை நடந்தால் முதலமைச்சர் தான் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில் முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசிதாவது, மனிதனை இறைவனுக்கு நிகராக துதி படுவது கண்டனத்திற்கு உரியது. இது பக்தர்களுக்காக நடந்த சூரசம்ஹாரம் விழா போல இல்லை. ரீல்ஸ்-காகவும் ரீல்ஸ் ஆட்சிக்காக நடந்த சூரசம்ஹாரம் போலவும் மாறியிருக்கிறது. இந்த விழாவில் முழுக்க அமைச்சர்களுக்கு தான் முதல் வரிசை கொடுக்கப்படுள்ளது. இது ஆன்மீக உலகிற்கும், ஆன்மீக தளத்திற்கு வெட்கக்கேடான விஷயம். இந்த ஆட்சி ஒரு சாராரை நோக்கி செல்லக்கூடிய ஆட்சி என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இதுகுறித்து ஏற்கனவே பாடகர்கள் விளக்கத்தை கொடுத்திருக்காங்க. நானும் அவங்ககிட்ட பேசும் போது அதற்கான விளக்கத்தை எல்லாம் சொன்னாங்க. இனிவரும் காலங்களில் கவனமாக செயல்படுவோம் என்றும் சொன்னாங்க. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் சரி, நாங்களும் சரி, இது போன்ற புகழ் பாடுறத விரும்புறது கிடையாது. இதை நாங்க பாடகர்கிட்டயும் சொல்லியிருந்தோம்.
இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுதியுள்ளது. மேலும் ஆன்மீகவாதிகளிடம் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.