தமிழ்நாடு

செங்கோட்டையில் ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்...!

Malaimurasu Seithigal TV


செங்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை  போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பகுதியில் பரபரப்பானது.. 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்ததை அடுத்து அவரது எம்பி பதவியை மத்திய அரசு ரத்து செய்தது. இது மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கும் செயல் எனக்கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை முழங்கியபடி செங்கோட்டை ரயில்வே பீடர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். ரயில் நிலையத்திற்கு 200 மீட்டருக்கு முன்பாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

இதனால் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ரயில்வே பீடர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறிது தூரம் ஊர்வலமாக செல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு போலீசார் அனுமதி அளித்தனர். இதன் பின்னர் ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை முழங்கியபடி ரயில் நிலையம் நோக்கி சென்றனர்.

அங்கு தடுத்து நிறுத்திய போலீசார் உடன் மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து செங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் செங்கோட்டை ரயில்வே பீடர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டது.