தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் காவல் மரணங்கள் குறித்தும் தவெக அரசு நடவடிக்கை எடுக்காததை குறித்தும் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்கா வழக்கில் நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சபரி வர்மன் காவல் மரணம் அடைந்தார். அவரை காவலர்கள் கடுமையாக தாக்கியதால் உயிரிழந்துள்ளார் என அவரின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உயிரிழந்த சபரி வர்மன் குடும்பத்திற்கு இரங்கல் செய்தியோ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பது அரசியல் வட்டாரத்திலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான அருணாச்சலம் என்ற இளைஞர், அரசு மதுபானக் கடையுடன் இணைந்த பாரில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 17-ஆம் தேதி அரசு மதுபானக் கடை மூடிய பிறகும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக தென்பாகம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். பின்னர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் உயிரிழந்தார். அதற்கு முன் தன்னை போலீஸ் பலமாக தாக்கியதாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்த வழக்கிலும் தவெக தலைவர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தவெக அரசை கண்டித்தது தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் “இந்த தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?” எனும் கேள்வியை முன்வைத்துள்ளார். கடந்த ஆட்சியில் சிவகங்கையில் காவல் மரணம் அடைந்த அஜித்குமாரின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார் அப்போதைய முதல்வர் ஸ்டாலின். அதற்கு தவெக தலைவர் விஜய் “Sorry சொன்னால் போதுமா?” என்று கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதை குறிப்பிட்ட ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? என்றும் கட்டமாக விமர்ச்சித்தார்.
மேலும் “Accountability, Apology – முதலமைச்சருக்கு பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?” என்றும் “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!” என்றும் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.