

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன் குடும்பத்தை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். உயிரிழந்த சபரி வர்மனின் குடும்பத்தினரை பாஜக நிர்வாகிகளுடன் நேற்று நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறைச்சாலையில் பான்மசாலா விற்பனை செய்த குற்றத்திற்காக விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த சபரி வர்மன் என்ற மாற்றுத்திறனாளி, சிறைக் காவலர்கள் மற்றும் கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் இன்று ஈத்தங்காட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறுகையில், பான் மசாலா விற்ற குற்றத்திற்காக தென்தாமரைகுளம் காவல் உதவி ஆய்வாளர் குடிபோதையில் சபரிவர்மனை கைது செய்துள்ளார். மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்காமல் தாக்கியுள்ளனர். காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆட்சியில் இது நடந்தால் யாரிடம் சொல்வது, இந்த ஆட்சி நீடித்தால் என்னென்ன நிகழும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் “கஞ்சா வைத்திருந்தவர் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை” என்றும் “பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் சிறையில் கொல்லப்படுகிறார்” என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு நாளைக்கு மூன்று கற்பழிப்பு தமிழகத்தில் நடைபெறுகிறது. திரைப்பட காட்சிகள் தான் தற்போதைய ஆட்சியில் நடப்பதாகவும் “திரைப்படத்தில் தான் ஜனநாயகம், ஆட்சியில் ஜனநாயகம் இல்லை” என்றும் காட்டமாக விமர்சித்தார்.
மேலும் தற்போதைய அரசுக்கு “மனப்பக்குவம் இல்லை, ஆட்சி செய்ய தெரியவில்லை, அமைச்சர்களுக்கு எதுவும் தெரியவில்லை” என்றும் விமர்சித்தார். சபரிவர்மன் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இரண்டு அமைச்சர்கள் மத்திய அரசின் அனுமதி இல்லாமலையே வெளிநாட்டிற்கு சென்று வந்தார்கள். ஏன் போனார்கள்? எதற்காக போனார்கள்? யாருடைய செலவில் சென்று வந்தார்கள்? என்று கேள்விகளை அடுக்கினார். மேலும் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் செல்லக்கூடாது என்பது தான் வழக்கம்” என்று தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.