Cyclone Arnab 
தமிழ்நாடு

அதிதீவிர புயலாக மாறும் அர்னாப் புயல்! ஆந்திராவுக்கு ரெட் அலர்ட்.. தமிழகத்திற்கு என்ன எச்சரிக்கை? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

மழைப்பொழிவு முற்றிலும் நின்றுவிடும் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Vinvizhi Leninton

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாகி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (அர்னாப்) வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று உருவாகியுள்ள இந்த அர்னாப் புயல் நாளை தீவிர புயலாகவும், நாளை மறுநாள் அதிதீவிர புயலாகவும் மாறும் என்று வானிலை ஆய்வுமையத்தால் கூறப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 115-125 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில சமயங்களில் 140 கி.மீ வேகத்தில் திடீரென வேகம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் புயல், புதன்கிழமை முற்பகலில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்து, பின்னர் ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

இன்று காலை 05:30 மணி நிலவரப்படி, அர்னாப் புயலானது கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில், நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், இது ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (அந்தமான் தீவுகள்) வடமேற்கே சுமார் 590 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 650 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 730 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே 830 கி.மீ தொலைவிலும், பாபட்லாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே 910 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை நள்ளிரவுக்குள் மேற்கு-மத்திய வங்கக் கடலில் தீவிர புயலாகவும் (Severe Cyclonic Storm), அக்டோபர் 27 அன்று அதே பகுதியில் மிகத் தீவிர புயலாகவும் (Very Severe Cyclonic Storm) வலுவடையக்கூடும். அதன்பிறகு, இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28 முற்பகல் நேரத்தில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரைப் பகுதிகளைக் கடக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த சமயத்தில் அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக இருக்கும், காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ வரையிலும், அவ்வப்போது 140 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக வருகின்ற 27ஆம் தேதி ஆந்திராவின் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுஒருபுறம் இருக்க தமிழ்நாடு 'வெதர் மேன்' பிரதீப் ஜான் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் மழை பொழிவு இனி எவ்வாறு இருக்கும் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில் அவர், 3 தலைப்புகளின் கீழ் மழைப்பொழிவு குறித்து விவரித்துள்ளார். அதில் அவர்,

இன்றைய மழைப் பகுதிகள்:

பெரும்பாலும், மாநிலம் முழுவதும் மழையில் இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம், குமரி, தூத்துக்குடி, நெல்லை, கடலூர் மற்றும் சிவகங்கையின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, ஆனால் மாலையிலிருந்து மழைப்பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இலங்கையில் இன்று மிகக் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை:

குறைந்த காற்றழுத்த அமைப்பு முன்னதாக சென்னை-புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது தெற்கு நோக்கி டெல்டா / இலங்கை கடற்கரையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட மழை முற்றிலும் கிடைக்கவில்லை.

நவம்பர் 1 வரை வறண்ட நாட்கள்:

அர்னாப் புயல் கிழக்கு திசைக் காற்றை தன்னுடன் இழுத்துச் செல்வதால், நாளை நண்பகல் முதல் மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதனால் மழைப்பொழிவு முற்றிலும் நின்றுவிடும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது,வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் சூழல் உள்ளதால் தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளிலிருந்து ஆழ்கடலுக்கு சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் உடனடியாக கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீன்வளத்துரையிடமிருந்து மறு உத்தரவு வரும்வரை யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லகூடாது என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

அர்னாப் புயல் ஒடிசாவை நோக்கி நகரும் என்பதால், அர்னாப் புயலால் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்கொள்ள ஒடிசா தயாராகி வருவதாகவும், மேலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படக்கூடாது என மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் ஒடிசா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்