

மற்றுமொரு காலை சென்னை மழையுடன் விழித்தெழுந்தது. நேற்றைய தினம் தமிழ்நாட்டின் மதுரை, விருதுநகர், கோவை, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் உட்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்று 26 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதனுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது." எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இன்றும் நாளையும் (அக். 23, 24) இரு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் வானிலை முன்னறிவிப்புகளைப் பின்பற்றிச் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாக்கிவரும் புயல் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "அடுத்த 4-5 நாட்களில் உருவாகி, தமிழ்நாட்டைப் பாதிக்காமல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ள புயலுக்கு, அர்னாப் என்று பெயரிடப்படும். முரசு அல்ல!" எனக் கூறியுள்ளார்.
மேலும், "இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதற்கு முன், அதிகாரப்பூர்வ பெயரிடும் வரிசையைச் சரிபார்க்கவும். தவறான டிஜிட்டல் தடயத்தை விட்டுச் செல்லாதீர்கள்." என்றும் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.