தமிழ்நாடு

சிலிண்டர் தட்டுப்பாடு.. மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது!

அரசைக் கண்டித்து மார்ச் 15 ஆம் தேதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

மாலை முரசு செய்தி குழு

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA அரசையும் அதன் கூட்டணியையும் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் வரும் மார்ச் 15 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக NDA அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் இன்று நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டருக்கும், வணிக கேஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். உணவகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை சரிவர இயங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காசிய நாடுகளில் தொடரும் போர் பதட்டம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு சார்பில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளதால் மக்கள் பதட்டம் அடைய வேண்டாம்" என்று கூறியிருந்தார்.

ஆனாலும் நாடெங்கிலும் பல இடங்களில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவிய வண்ணமே இருந்துவருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் வாகனங்களுக்கு பெட்ரோல் போட காத்திருக்கும் நிலை, சமையல் எரிவாயுவிற்கான கால நீடிப்பு போன்ற நிலை நாடெங்கிலும் நிலவி வருகிறது. தமிழ்நாட்டிலும் மக்கள் இதே அவல நிலையில் இருப்பதால், தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜக அரசைக் கண்டித்து மார்ச் 15 ஆம் தேதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறு தொழில்கள் உள்ள, அதிக தொழில் வளமிக்க தமிழ்நாடு இந்த கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்தார். ஆனால் தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையை சீராக்க முறையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. இதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தில் இதை பற்றி பேசவே பிரதமர் மோடி மறுத்து வருவது மிகவும் கண்டத்திற்குரியது. இதுதவிர்த்து, ஈரான்-இஸ்ரேல் போருக்கு முன்னெச்சரிக்கை இல்லை, நூறு நாள் வேலைத்திட்டம், மதுரை மற்றும் கோவை மெட்ரோ விவகாரம், ஒசூர் விமான நிலையம் மறுப்பு, கீழடி விவகாரம், மும்மொழி கொள்கை மூலம் தமிழை அழிக்க நினைப்பது போன்ற காரணங்களால் ஆளும் மத்திய அரசு நீண்ட காலமாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து வரும் மார்ச் 13ம் தேதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர் திமுக கூட்டணியினர்.

இந்த மத்திய அரசின் தமிழ்நாட்டினை வஞ்சிக்கும் போக்கினை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.