ஸ்தம்பிக்கும் LPG சிலிண்டர் முன்பதிவு.. கைகொடுக்குமா ஈரானுடனான மோடியின் பேச்சுவார்த்தை?

“சிலர் சமையல் ஏரிவாயு குறித்து பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்” மேலும் "இது அவர்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் நாட்டையும் காயப்படுத்துவதாக இருக்கிறது"..
ஸ்தம்பிக்கும் LPG சிலிண்டர் முன்பதிவு.. கைகொடுக்குமா  ஈரானுடனான மோடியின் பேச்சுவார்த்தை?
Published on
Updated on
2 min read

வளைகுடாவில் நிலவும் மோதலால் எரிசக்தி தட்டுப்பாடு உலகளாவிய பிரச்சனையாக மாறி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் "எரிவாயு பற்றாக்குறை குறித்து பதற்றமடைய வேண்டாம்" என்றும் "ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

“உலக எண்ணெய் சந்தையின் வரலாற்றில் மிகப்பெரிய விநியோக தடையுறு இது” என சர்வதேச எரிசக்தி நிறுவனம் கூறுகிறது. உலக எரிசக்தி சந்தைகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு ஏற்கனவே இந்தியாவிலும் பரவி வருகிறது, இங்கு சமையல் எரிவாயு பற்றாக்குறை குறித்த அச்சம் மும்பை மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர்களை பதுக்கி வைப்பது மற்றும் கள்ளச் சந்தையில் விற்பது பரவலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய அரசாங்கம் எரிசக்தி சுத்திகரிப்பு நிறுவனங்களை நோக்கி உற்பத்தியை அதிகரிக்க அழுத்தம் கொடுத்தாலும், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு அல்லது LPG பற்றாக்குறை வரும் வாரங்களில் தொடரக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எரிவாயு பற்றாக்குறை குறித்து பதற்றமடைய வேண்டாம் என்றும் “சிலர் சமையல் ஏரிவாயு குறித்து பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்” மேலும் "இது அவர்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் நாட்டையும் காயப்படுத்துவதாக இருக்கிறது" என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன்  தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். அப்போது ஈரானில் அதிகரித்து வரும் வன்முறை, பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் ஈரான் உட்கட்டமைப்பு சேதம் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் ”இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகள் அதன் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகம் தான்” என்று பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் - அமெரிக்காவின் கூட்டு ராணுவ தாக்குதலுக்கு ஈரான் பதிலளித்து வருவதை தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடைபட்டதையடுத்து சமையல் எரிவாயு விநியோகமும் தடைபடும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை முக்கிய திருப்பக்கமாகக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கடந்த காலங்களில் பல நெருக்கடிகளை சந்தித்ததாகவும் அதை சமாளித்து வந்ததாகவும், அதே போல் இந்த எரிவாயு தட்டுப்பாட்டையும் சமாளித்து மீளும் என்றும் அதற்கு மக்கள் ஒற்றுமையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுமார் 20 சதவிகித போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார், ஆனால் நாட்டில் தற்போதைக்கு போதுமான சமையல் எரிவாயு விநியோகம் உள்ளது என உறுதியளித்துள்ளார். மேலும் எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதில் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சமையல் எரிவாயுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் உண்மையில் அவ்வாறு இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

மொபைல் செயலிகள் மற்றும் வலைதளங்கள் ஆகிய டிஜிட்டல் தளங்கள் மூலம் முன்பதிவுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் சேவையகங்கள் செயலிழந்தன, நகரங்களில் உள்ள மக்கள் தங்கள் சிலிண்டர்களை மீண்டும் நிரப்ப டீலர் கடைகளுக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஏற்கனவே புக்கிங் செய்தவர்களுக்கு ரத்தானதாக அலெர்ட் மெசேஜ் வருவதாக தெரிவிக்கிறார்கள். மேலும் புதிதாக முன்பதிவு செய்பவர்களுக்கும் “சர்வர் டவுன்”  என வருவதாகவும் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சஷி காந்த் சர்மா “எப்போதும் இல்லாத அளவுக்கு முன்பதிவுகள் 10 மடங்கு அதிகரித்துள்ளது “ எனவும்  “இந்த இணையதளம் அவ்வளவு பயனர்களை அனுமதிக்குமளவுக்கு உருவாக்க படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது விரைவில் சரி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com