தமிழ்நாடு

“இதை எதிர்பார்க்கலைல!.. தாராபுரத்தில் ட்விஸ்ட் கொடுத்த தவெக” - மீண்டும் மகுடம் சூடுவரா சத்தியபாமா?

தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்...

Mahalakshmi Somasundaram

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில், தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது. தவெக வேட்பாளர் சத்தியபாமா 1,422 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பானுமதி 926 வாக்குகளையும், திமுக வேட்பாளர் சுகன்யா 711 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக இடையே முக்கியப் போட்டி நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர். பொது தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரத்தில் வெற்றி பெற்ற சத்தியபாமா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அதே தொகுதியில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்ட போது அத்தொகுதி மக்களால் சத்தியபாமா விரட்டி அடிக்கப்பட்டதாகவும், சிலர் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே அரசியல் விமர்சகர்கள் தாராபுரத்தில் நிச்சயம் சத்தியபாமா வெற்றி பெறமாட்டார் என கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்தச் சூழலில், முதல் சுற்று முடிவில் தவெக முன்னிலை பெற்றிருப்பது அக்கட்சியினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த (அக்டோபர் 6) ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், தாராபுரம் தொகுதியில் 1,79,214 வாக்குகள் பதிவாகின. இது மொத்த வாக்குகளில் 80.25 சதவீதமாகும். இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று வாரியாக எண்ணப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் முன்னிலை நிலவரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் சுற்றில் தவெக முன்னிலை பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த நிலை தொடருமா அல்லது மற்ற கட்சிகள் முன்னிலையை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இறுதி முடிவு வெளியாகும் வரை தாராபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்