தமிழ்நாடு

EPS வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்தாரா விஜய்? - ‘மற்றும் பலர்’ விமர்சனத்திற்கு எடப்பாடி பதிலடி.. பிரச்சாரத்தில் சூடுபிடித்த மோதல்!

அரசு ஆலோசகராக ஜோதிடரை நியமித்ததாகவும், அந்த ஜோதிடர் கூறியதன் அடிப்படையில்தான் முதல்வருக்காக புதிய அறை தயாரிக்கப்படுவதாகவும்

Muthu Lakshmi

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட தளவாய்பட்டினத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசிய அவர், தவெக மற்றும் அதன் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த இடைத்தேர்தல் இயற்கையாக வந்தது இல்லை என்றும், திணிக்கப்பட்ட தேர்தல் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எம்.எல்.ஏ ஒருவர் உயிரிழந்தால் இயற்கையாக இடைத்தேர்தல் வரும் என்றும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் குதிரை பேரத்தில் விலைபோய் தவெகவுக்கு சென்றுவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். “இப்படி துரோகச் செயலில் ஈடுபட்டவரை தோல்வியடையச் செய்வீர்களா? இவ்வளவு பேரின் உழைப்பையும் கெடுத்த அவருக்கு நீங்கள் கொடுக்கும் அடி சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அடுத்த கட்சியில் வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்ய வைத்து, தங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தியதுதான் முதல்வரின் வெளிப்படைத்தன்மையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “இவரா நல்லாட்சி கொடுப்பார்? எவர் அடுத்தவர் பொருளை அபகரிக்கிறாரோ அவரை என்ன சொல்வது?” என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தாராபுரத்தில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். தவெக ஆரம்பித்து மூன்று ஆண்டுகள்தான் ஆகிறது என்றும், அதிமுகவை விமர்சிக்கும் போது “மற்றும் பலர்” என்று விஜய் கூறுவதாகவும் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அதற்கு இதுவரை எந்த கூட்டத்திலும் பதில் அளிக்கவில்லை என்றும், தற்போது பதில் அளிப்பதாகவும் கூறினார்.

“அந்த மற்றும் பலரான எனது வீட்டில் தான் 3 மணி நேரம் வந்து காத்துக்கிடந்தார் விஜய்” என்று கூறிய அவர், ஒரு திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக விஜய் தன்னை சந்தித்ததாக தெரிவித்தார். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லை என்றும், அனைத்து டிக்கெட்டுகளையும் விற்றுவிட்டதாகவும் விஜய் தன்னிடம் தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார். தான் எந்தக் கட்சி என்று பார்க்காமல் உதவி செய்ததாக தெரிவித்த அவர், மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு பேசி, அடுத்த நாள் அந்த திரைப்படம் வெளியாவதற்கு துணை நின்றதாகவும் கூறினார்.

“தலைவர் முதல் தொண்டர் வரை நன்றியோடு இருப்பது அதிமுக” என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தற்போது விஜய் தன்னைப் பற்றி பேசுவதற்கு வாய் கூச வேண்டும் என்றும், அவர் பேசவே வேண்டாம் என்றும் விமர்சித்தார்.

“முதலில் எல்லாம் விஜய் முகத்தை காட்டினால் ஓட்டு விழும் என்றார்கள். ஆனால் மறுபடியும் நான்காம் தேதி கிராமம்தோறும் வரப்போகிறாராம். நீங்கள் கிராமம் தோறும் போனாலும் மக்கள் உங்களைப் புரிந்துகொண்டார்கள், உங்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்” என எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், “உங்கள் நடிப்பை எல்லாம் திரைப்படத்தோடு வைத்துக்கொள்ளுங்கள். இனி நடிக்க முடியாது, எவ்வளவு நாள் மக்கள் ஏமாறுவார்கள்? எல்லாம் ரீல்ஸ் போடுவது, ரீல் விடுவதுதான்” என்றும் அவர் விமர்சித்தார்.

“பச்சை குழந்தை முதல் பாட்டி வரை சொந்தம்” என்று விஜய் கூறுவதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அதற்கான தகுதி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கரூரில் நடைபெற்ற விஜய் கூட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பாட்டிகள் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் குறிப்பிட்ட அவர், விஜய் அங்கு சென்று பார்த்தாரா என கேள்வி எழுப்பினார்.

கரூர் சம்பவத்தையும் தனது பேச்சில் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “எல்லோரும் யாரை பார்க்க வந்தார்கள்? விஜய்யை பார்க்கத்தான் வந்தார்கள். அப்படி இருக்கும்போது அஞ்சலி செலுத்த வேண்டுமல்லவா? எதுவும் செய்யவில்லை. விமானத்தில் ஏறிப் போய்விட்டார்” என்று விமர்சித்தார். மேலும், சென்னைக்கு சென்று 72 நாட்கள் வீட்டை விட்டு வரவில்லை என்றும் கூறிய அவர், “இவரா மக்களுக்கு சொந்தம்?” என கேள்வி எழுப்பினார்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் முன்னிலையில் இருப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தவெக ஆட்சியில் ஐந்து மாதங்களில் என்ன செய்துள்ளனர் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக விமர்சித்தார். ஒரே நாளில் எட்டு கொலைகள் நடப்பதாகவும், ஒரு நாட்டின் வளர்ச்சி சட்டம் ஒழுங்கில் தான் இருப்பதாகவும் அவர் கூறினார். போதைப்பொருள் விற்பனை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர வேண்டுமா என கேள்வி எழுப்பிய அவர், இது நிர்வாக திறமையற்ற அரசு என்றும் விமர்சித்தார்.

இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசுக்கு கடிவாளம் போடும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மின்வெட்டு குறித்தும் பேசிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கூட மின்வெட்டு ஏற்படுவதாக விமர்சித்தார். அண்மையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க நான்கரை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறிய அவர், அணை கட்டிய செலவே நான்கரை கோடி ரூபாய்தான் என்றும் தெரிவித்தார். “ஒரு சுவிட்ச் போட்டு தண்ணீர் திறப்பதற்கு நான்கரை கோடி செலவு செய்த முதல்வரா ஏழைகளைப் பற்றி கவலைப்படுவார்?” என கேள்வி எழுப்பினார். தான் முதல்வராக இருந்தபோது இன்னோவா காரில் சென்று, 30 லிட்டர் டீசல் மட்டுமே செலவானதாகவும், அது அதிமுக ஆட்சி என்றும் அவர் கூறினார்.

தவெகவைச் சேர்ந்த அருண்ராஜ் தங்களை கிளி ஜோசியம் பார்ப்பதாக விமர்சிப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, “நாங்களா பார்க்கிறோம்? ஜோதிடரை மடியில் கட்டிக்கொண்டு அலைபவர்கள் நீங்கள்” என பதிலடி கொடுத்தார். அரசு ஆலோசகராக ஜோதிடரை நியமித்ததாகவும், அந்த ஜோதிடர் கூறியதன் அடிப்படையில்தான் முதல்வருக்காக புதிய அறை தயாரிக்கப்படுவதாகவும், புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான இடம் பார்க்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

“ஜோதிடர் சொல்லித்தான் சாப்பிடுகிறார், தண்ணீர் குடிக்கிறார். இவர் எங்களைப் பார்த்து கிளி ஜோதிடம் பார்ப்பதாக சொல்கிறார்” என்றும் அவர் விமர்சித்தார்.

திமுகவை “தீயசக்தி” என்று அதிமுக கூறுவதையே விஜய் தற்போது கூறுவதாகவும், புதிதாக எதையும் அவர் சொல்லவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்தபோது, அவர்களை “கல்லாப்பெட்டிக் கூட்டணி” என்று விஜய் விமர்சித்ததாகவும், தற்போது அந்தக் கட்சிகளை வைத்துத்தான் ஆட்சி நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

“நீங்கள் ஆட்சி அமைக்க இவர்களை பயன்படுத்தி, அமைச்சர் பதவி கொடுத்தவர் அப்படிப் பேசலாமா?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். திமுகவும் அதிமுகவும் கூட்டணி என்று விஜய் கூறுவதைத் தவிர வேறு என்ன தெரியும் என்றும், யாரோ எழுதி கொடுத்ததை அவர் பேசுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். இறுதியாக, அதிமுக மக்களின் குரலை ஒலிக்கும் கட்சி என்றும், கட்சி மாறிப்போனவர்களைப் பற்றி பேசத் தேவையில்லை என்றும் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “வீரத்தின் அடையாளம் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தது யார்? அப்படிப்பட்டவர்கள் தான் இவர்களும். அவர்களைப் பற்றி பேசத் தேவையில்லை” எனக் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்