

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக மாமண்டூரில் தொடங்கிய அவரது ரோடு ஷோ, சுமார் 45 கி.மீ. தூரம் பயணித்து மதுராந்தகத்தில் நிறைவடைகிறது. வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதியம் 2.30 மணியளவில் மாமண்டூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், பிரச்சார வாகனத்தில் நின்றபடி பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவருடன் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலும் பிரச்சார வாகனத்தில் இடம்பெற்றுள்ளார். வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த ரோடு ஷோவின்போது, பொதுமக்களை சந்தித்த விஜய் ஒரு தேநீர் கடையில் நின்று தேநீர் அருந்தியபடியே வாக்கு சேகரித்தார். உடன் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலும் தேநீர் அருந்தி மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து, விவசாயி ஒருவரின் வயலுக்கு சென்று அங்கு அவரின் டிராக்டரை ஓட்டினார். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விஜய் டிராக்டரையும் ஓட்டி வாக்கு சேகரித்தார். டிராக்டரை விஜய் ஓட்டிய காட்சிகள் அப்பகுதியில் கவனம் பெற்றன.
மாமண்டூர், புக்கத்துறை, படாளம், கருங்குழி, மதுராந்தகம் புறவழிச்சாலை, மோச்சேரி, பெரும்பாக்கம், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக இந்த ரோடு ஷோ நடைபெற்று வருகிறது. வழியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து, மரகதம் குமரவேலுக்கு ஆதரவு கோரி விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேல்மருவத்தூர் பகுதியில் விஜய் ஆதிபராசக்தி கோயில் சந்திப்பை அடையும் நிலையில், அங்கு அவர் வழிபாடு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மதுராந்தகம் நோக்கி ரோடு ஷோ தொடர்கிறது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் அக்டோபர் 4ஆம் தேதி மாலையுடன் நிறைவடைய உள்ளதால், தற்போது இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, விஜய்யின் நீண்ட தூர ரோடு ஷோவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்-சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ரோடு ஷோவில் பங்கேற்க வேண்டாம் என தவெக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்காக குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேநீர் அருந்தியபடி மக்களை சந்தித்தது முதல் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரித்தது வரை, விஜய்யின் இந்த ரோடு ஷோவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகள் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்