udhayanidhi-stalin 
தமிழ்நாடு

"இவங்க கட்சி மாறனும்னா கூட டெல்லி போய் அனுமதி வாங்கணும்..” - தவெக பாஜகவின் மற்றொரு கிளை..! உதயநிதி ஸ்டாலின் சுளீர்!!

அதிமுகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்கள் வேறு கட்சியில் ...

மாலை முரசு செய்தி குழு

வருகிற 2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள். 

ஆனால் தமிழகத்தின் பிரதான கட்சிகளான, திமுக அதிமுக -வின் கூட்டணிகளுக்குள் உள்கட்சி பூசல்கள் நிச்சயம் உள்ளன. மேலும், அதிமுக -வின் உள்கட்சி விவகாரம் ஊரறிந்த ஒன்றாக ஆகிவிட்டது. திமுக கூட்டணி வலிமையான ஒன்றாக தென்பட்டாலும், அது உண்மையில் அப்படி இல்லை.

விஜயுடன் செங்கோட்டையன்! 

50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியிலிருந்த செங்கோட்டையனை எடப்பாடி அதிரடியாக நீக்கியிருந்தது, அவருக்கு பெரும் பின்னடைவுதான் என்கின்றனர் ஆர்வலர் பலர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் செங்கோட்டையன். 

விஜயின் பிரதான எண்ணம் அதிமுக -விற்கு மாற்றாக மாறி அந்த வாக்குகளை பெறுவதுதான். அதனால் தான் அவர் தொடர்ந்து பொதுவெளியில் எம்.ஜி.ஆர் -ஐ பற்றி பேசி வருகிறார். மேலும், தனது கட்சியின் முதல் கூட்டணியாக அதிமுக -விலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையனை சேர்த்துள்ளார். ஆனால் ஒருவிஷயத்தை கூர்ந்து கவனித்தால் அவர் ஜெயலலிதாவைப் பற்றி அதிகம் பேசியிருக்க மாட்டார். காரணம் ஜெயலலிதா சமகால அரசியல்வாதி, அவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இறந்தார்.  மேலும் அவர் சொத்து குவிப்பில் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி இதையெல்லாம் விஜய் நிச்சயம் யோசிப்பார். ஆனால் உண்மையில் அவர் எல்லோரின் வாக்குகளையும் உடைக்கிறார் என்பதுதான் உண்மை” 

திமுக -வின் எதிர் அரசியல்!

என்னதான் திமுக -வினர் விஜயை அவாய்ட் செய்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக விஜய் திமுக -வின் ஒரே எதிராளியாக மாறிவிடுவாரோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இந்த் சூழலில்தான், 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், 'புதிய திராவிட கழகத்தின்' வெல்லட்டும் சமூகநீதி ஆறாவது மாநில மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின் “மறுபுறம் திராவிடம் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தன்னுடைய கட்சியிலேயே திராவிடத்தை வைத்துக்கொண்டு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று அவர் கூறியிருக்கிறார். திராவிடத்தை மட்டுமல்ல அவர் எம்ஜிஆரை, அண்ணாவையும் கூட மறந்து விட்டார். அவருடைய மனதில் இருப்பது எம்ஜிஆரோ, அண்ணாவோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோ கிடையாது. அவருடைய மனதில் முழுக்க நிறைந்து இருப்பது அமித்ஷா மட்டும்தான்.

அதிமுகவில் அமித்ஷாவுக்கு சேவகம் செய்ய பலர் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். வங்கிகளை எடுத்துக் கொண்டால் அதற்கு பல கிளைகள் இருக்கும். ஈரோடு, மதுரை, நெல்லை, கோவை என கிளைகள் பல இருக்கும். அதனுடைய தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கும். டெல்லியில் இருந்து இந்த கிளைகள் வழிநடத்தப்படும் கட்டுப்படுத்தப்படும். இன்றைக்கு அது போல தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு டெல்லியில் இருக்கக்கூடிய அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் பல கார்கள் மாறிச் சென்று அமித்ஷாவை சந்தித்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல அதிமுக முன்னாள் மூத்த அமைச்சர், ஹரித்வார் செல்கிறேன், ஆன்மீக பயணம் செல்கிறேன் எனகூறிகொண்டு அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறார். அதன் பின்னர் மற்றொரு கட்சியில் இணைந்து இருக்கிறார். அதிமுகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்கள் வேறு கட்சியில் இணைவதாக இருந்தால் கூட டெல்லிக்கு சென்று அமித்ஷாவிடம் அனுமதி வாங்கிவிட்டுதான் வர வேண்டும். அந்த வகையில் தற்போது அவர் இணைந்திருப்பது மாற்றுக் கட்சியில் அல்ல, மாற்று கிளையில்" என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.