தமிழ்நாடு

"பாமக இரண்டு அணியா உடைய காரணமே திமுகதான்” - சசிகலாவுடன் நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை… புதிய கட்சியுடன் ராமதாஸ் கூட்டணியா?

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் பரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாமக கட்சியில் நிலவும்  உட்கட்சி பிரச்சனையால் இன்னும் கூட்டணியை உறுதி செய்யாத நிலையில் ராமதாஸ் அணி உள்ளது. இதற்கிடையில் பாமக சின்னம் மற்றும்  கட்சி பெயரை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் “அவருக்கு வயதாகி விட்டது கட்சி சார்ந்த முடிவுகளை அவரால் எடுக்க முடியாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து நேற்று பல்லாவரத்தில் நடந்த கட்சி நிகழ்வில், “பாமக தொடங்கி 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. நம்மகிட்ட என்ன இல்லை என சொல்லுங்கள். இங்கு இருக்கும் கட்சிகளில் மிகச் சிறந்த கொள்கை, மிகப்பெரிய செயல் திட்டம், தொலைநோக்கு பார்வை நம்மிடம் தான் உள்ளது. தமிழ்நாட்டில் எவ்வளவு சாதனைகள் நாம் செய்திருக்கிறோம். ஆனால் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் கிடையாது. நமக்கு பின்னால் தொடங்கிய, தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத கட்சிகளுக்கு எல்லாம் அங்கீகாரம் கிடைத்துள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து திமுகவை விமர்சித்து “நல்லா இருந்த குடும்பத்தை அவர்கள் தான் பிரித்து இப்படியான கேடுகெட்ட நிலைக்கு கொண்டு வந்தது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இதுதான் திமுகவின் கடைசி தேர்தலாக இருக்கும். நம்முடைய கோபத்தை இந்த தேர்தலில் தான் காட்ட வேண்டும்”  என்றும் பேசியுள்ளார்.

பாமகவின் ராமதாஸ் அணி சசிகலாவுடன் கூட்டணி அமைக்கும் என சொல்லப்படுகிறது. காரணம் நேற்று திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை சசிகலா நேரில் சந்தித்து 1 மணி நேரத்திற்கு மேலாக பேசிய சம்பவம் தான். இந்த பேச்சுவார்த்தை  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக கட்சியில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவர் அன்புமணி முன்பிருந்த அதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும் அன்புமணிக்கு இந்தக் கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விருப்ப மனு வழங்கப்பட்டுவிட்டது.

முதலில் பாமக கட்சி யாருக்கு எனும் நிலையில், தொடர்ந்து போராடிய ராமதாஸ் அணிக்கு வெற்றி கிட்டவில்லை. அதனையடுத்து அன்புமணி அணிக்கே சாதகமானது கட்சியும் அவர் வசம் சென்றது . இந்நிலையில், மருத்துவர் ராமதாஸ் புதிய கட்சி தொடங்குவரா அல்லது எந்த கூட்டணியில் இணைவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை முடிவு செய்துள்ள நிலையில் பாமகவின் ராமதாஸ் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. தேசிய முற்போக்கு கூட்டணிக்கு செல்ல போகிறார் என நினைத்த நிலையில் அங்கு அன்புமணி அணி இருப்பதால் அந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. மேலும் திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும் என ராமதாஸ் தெரிவித்திருந்த நிலையில் திமுக-விலும் கூட்டணி முடிவு எட்டப்படவில்லை. ராமதாஸ் அணி இருந்தால் திமுக கூட்டணியை விட்டு வெளியேருவோம் என்ற கூட்டணி கட்சிகளின் பேச்சால் அதுவும் கைகொடுக்கவில்லை.

தற்போது எதிர்பாராத சசிகலா-ராமதாஸ் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராமதாஸ் சசிகலா இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாகவும் இது குறித்து இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

புதியதாக தொடங்கப்பட்ட  கட்சிக்கான கொடி அறிமுகம் செய்யப்பட்டாலும், கட்சியின் பெயரை அறிவிக்கப்படாத நிலையில் உள்ள வி கே சசிகலா, இது வரையில் எந்த கூட்டணியிலும் இணையாத பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.