கொளத்தூரை பறித்த ஸ்டாலின்? சேகர் பாபுவுக்கு செக் வைத்த திமுக மறுசீரமைப்பு! 
தமிழ்நாடு

கொளத்தூரை பறித்த ஸ்டாலின்? சேகர் பாபுவுக்கு செக் வைத்த திமுக மறுசீரமைப்பு!

கடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூரில் ஸ்டாலினை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு சேகர் பாபுவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக கொளத்தூரில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.

மாலை முரசு செய்தி குழு

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டத்தில், கட்சியை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, எந்தெந்தக் கழக மாவட்டங்களில் எந்தெந்தத் தொகுதிகள் அடங்குகின்றன என்பதைக் கூறும் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Sekar babu and stalin in kolathur

ஸ்டாலின் பதிவு

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை? காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.

கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன்.

கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.

உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

stalin in kolathur

சென்னையில் பெரும் தோல்வி!

புதிய மறுசீரமைப்பின்படி, சென்னை வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு, மத்தி, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு ஆகிய 10 கழக மாவட்டங்களின் கீழ் 21 தொகுதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தலைநகர் சென்னை திமுகவின் கோட்டை என்ற நிலையைப் புரட்டிப் போட்டன சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் கட்சித் தலைவர் ஸ்டாலினின் தோல்வி அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கொளத்தூரில் அதிகாரத்தை இழக்கும் சேகர் பாபு

அதிமுகவிலிருந்து பிரிந்து, கடந்த 2011ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தவர் சேகர் பாபு. இணைந்தது முதலே நாளுக்கு நாள் கட்சியில் அவரது செல்வாக்கு அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளாகத் தலைமை குடும்பத்தின் நெருங்கிய புள்ளியாக வலம் வந்தார். இது கழக நிர்வாகிகள் பலரை காழ்ப்புணர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தாலும், அவரது செல்வாக்கு அசைக்க முடியாததாக இருந்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் கட்சித் தலைவர் ஸ்டாலினை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலாளரான அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக கொளத்தூரில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.

இதனால், கட்சிக்குள்ளேயே பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டார் சேகர் பாபு.

இந்தத் தோல்வி மு.க.ஸ்டாலினை பர்சனலாக பாதித்துள்ளது. நிர்வாகிகளின் அறிவுரையைக் கேட்டு, சேகர் பாபுவை கொளத்தூர் பொறுப்பில் இருந்து விலக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த முடிவு புதிய மாவட்டச் செயலாளர்கள் பிரிப்பில் எதிரொலித்துள்ளது.

Chennai DMK

வட சென்னையில் திருவொற்றியூர், மாதவரம் தொகுதிகளை சென்னை வடகிழக்கு மாவட்டமாகவும், பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளை சென்னை வடக்கு மாவட்டமாகவும், துறைமுகம், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம் தொகுதிகளை சென்னை கிழக்கு மாவட்டமாகவும் பிரித்துள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு துறைமுகம், கொளத்தூர் என இரண்டு தொகுதிகளையும் பார்த்துக்கொண்டார் சேகர் பாபு. தற்போதைய மறுசீரமைப்பில், கொளத்தூர் சென்னை வடக்கு மாவட்டத்திலும், துறைமுகம் சென்னை கிழக்கு மாவட்டத்திலும் பிரிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், அவரது சொந்த தொகுதியான துறைமுகம் அடங்கியுள்ள சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டால், கொளத்தூரில் அவரது பிடிப்பை இழப்பார். இது தலைமையின் திட்டமிடப்பட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

கொளத்தூரில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் அவர் வெற்றி பெற்றாலோ அல்லது மீண்டும் தேர்தல் நடந்தாலோ, இது சேகர் பாபுவுக்குப் பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.