"கலெக்டருக்கு தவெக MLA 'ஆபாச குறுஞ்செய்தி' - அதிகாரிகள் புலம்பல்.. வீக் எண்ட் மோடில் CM" - வெளுத்து வாங்கிய திமுக! 
தமிழ்நாடு

"கலெக்டருக்கு தவெக MLA 'ஆபாச குறுஞ்செய்தி' - அதிகாரிகள் புலம்பல்.. வீக் எண்ட் மோடில் CM" - வெளுத்து வாங்கிய திமுக!

சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்களையும் காவல்துறையின் முறை தவறிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது திமுக.

Antony Ajay R

தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டத்துக்கு இடையே ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றது. அதில் ஒரு காவலர், சிறார்கள் மற்றும் ஒரு இளம் பெண்ணும் அடக்கம் என்பது நாட்டையே உலுக்கியுள்ளது.

இத்துடன் தமிழக வெற்றிக் கழகம் துறையூர் MLA-வும் சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவி ரங்கர், தொகுதியில் உள்ள குறைகளை எடுத்துரைக்க வந்தவரை அடித்த வீடியோவும் அதை மறைக்க எடுத்த முயற்சிகளும் அம்பலாமாகியிருக்கிறது.

இத்துடன் சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்களையும் காவல்துறையின் முறை தவறிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது திமுக.

அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில், "தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 13 கொலைகள். ஸ்டாண்ட-அப் காமெடியன் ‘பண்டிகை காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கொலைகளைத் தடுக்க வக்கில்லாத அரசு தனது காங்கிரஸ் அடிமைகளை வைத்து சுடுகாட்டுக்கு வழி சொல்கிறது !

DMK வெளியிட்ட புகைப்படம்

துணை சபாநாயகர் ஒருவரை அடித்து வீடியோ வைரலான செய்தியை மறைக்க அடி வாங்கியவரை மிரட்டி பேச வைத்து அதை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘என்னை மிரட்டித்தான் பேச வைத்தார்கள்’ என்று அடி வாங்கியவர் போட்டு உடைத்துவிட்டார்.

பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு த.வெ.க எம்.எல்.ஏவே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இச்செய்திகள் எதையுமே முதலமைச்சர் விஜய் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என அதிகாரிகள் புலம்புவதாக செய்திகள் வருகின்றன.

“இது நாடா? இல்லை காடா?” என்று தேர்தலுக்கு முன் கேட்டவர், இன்று தமிழ்நாட்டை வேட்டைக் காடாகவும் சுடுகாடாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டாரா?

எதையும் கண்டுகொள்ளாமல், ‘9 டூ 5 சி.எம்’ வீக் எண்ட் விடுமுறையில் not reachable modeல் ஜாலியாக இருக்கிறார் போலிருக்கிறது.

மக்களின் உயிர் பறிக்கப்படுவதற்கு வெட்கமே இல்லாமல் வக்காலத்து வாங்குகிறது தற்குறி அரசு" எனப் பதிவிட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.