தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த வாரம் நடந்து முடிந்துள்ளது. இதில் பட்ஜெட்டுடன், காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. சச்சரவுகளுக்கும், கலகலப்புகளுக்கும் குறையில்லாத இந்தக் கூட்டத்தொடரில், திமுக சீனியர்களுக்கும் தவெகவின் இளம் அமைச்சர்களுக்குமான உரசல்கள், சபாநாயகருக்கு சம்பளத்துக்கு அதிகமாகவே வேலை வைத்துவிட்டன என்பதை மறுக்க முடியாது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சர் வேட்டி, சட்டையில் நுழையும்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று மேசையைத் தட்டி ஆரவாரமாக வரவேற்றனர். தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வரவேற்க, அது மாஸ் சீனாக மாறியது. பின்னணியில் ரசிக எடிட்டர்கள் ‘பாகுபலி’ BGM-ஐப் போட, இணையத்தில் லைக்குகள் பறந்தன.
இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஹைலைட்டாக அமைந்தது விஜய் மற்றும் உதயநிதி இடையிலான வார்த்தைப்போர்தான். இளம் எதிர்க்கட்சித் தலைவர், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாதது குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
தவெக அரசு அமைந்த பிறகு, காவிரியில் அணை கட்டும் நடவடிக்கையை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், "அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஆளுங்கட்சிக்கு என்ன பயம்? என்ன தயக்கம்?" எனக் கேள்விகளை எழுப்பி, தவெக உறுப்பினர்களை உசுப்பினார்.
அவரது பேச்சின் இடையில், சபாநாயகர் 2, 3 முறை குறுக்கிட்டு, ‘டேமேஜ் கண்ட்ரோல்’ செய்யும் நிலை ஏற்பட்டது. தவெக அரசின் குறைகளை யார் சுட்டிக்காட்டத் தொடங்கினாலும் சுருக்கமாக பேசுங்கள், கடிதத்தில் இருப்பதைப் பேசுங்கள் எனக் கட்டையைப் போட முயற்சித்தார் சபாநாயகர். ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லார் பேசியதிலும் 10% அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
உதயநிதிக்கு பதிலளித்த முதலமைச்சர், "ஒருமுறை முயன்று பார்க்கலாம் என்றுதான் கர்நாடகாவுடன் பேச நினைத்தேன். பகை நாடுகளே பேசும்போது, பக்கத்து மாநிலங்கள் ஏன் பேசக்கூடாது என்றுதான் அந்த முயற்சியை எடுத்தேன். அதில் அவமானம் நேர்ந்தால் என்ன செய்வது என்று கேட்டார்கள். அப்படி நேர்ந்தால், தமிழக மக்களுக்காக அதையும் தாங்கிக்கொள்கிறேன் என்றேன்" என்றார்.
முதல்வர் சென்டிமென்ட்டாக பேசிய இந்தப் பாயிண்டை பின்னர் அவருக்கு எதிராகவே பிற கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர். தேமுதிக உறுப்பினர் பிரேமலதா, "தமிழக முதல்வருக்கு தலைகுனிவு ஏற்பட்டால் நாங்கள் எல்லாம் சும்மா இருப்போமா? தமிழ்நாடு வெகுண்டெழும். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றார்.
திமுக கூட்டணியில் இருக்கும் பிரேமலதா, விஜய்க்கு ஆதரவாகப் பேசியது கவனம் ஈர்த்தது. ஆனால், தவெக அரசுக்கு ஆதரவு அளித்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஆர். செல்லசாமி, "மேகதாது அணை விவகாரத்தை நாம் சட்டரீதியாக வெல்ல வேண்டுமே தவிர, அவர்களிடம் சென்று கெஞ்சத் தேவையில்லை. அங்கு சென்று அவமானம் ஏற்பட்டால், தாங்குவதற்குத் தயார் என்று முதல்வர் சொல்கிறார். அது சரியல்ல. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைவரின் கருத்துகளையும் அறிய வேண்டும்" எனப் பேசினார்.
உதயநிதிக்கு தொடர்ந்து பதிலளித்த முதலமைச்சர், "கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டது குறித்து 1969-ஆம் ஆண்டு சபையில் ஒரு விவாதம் நடந்திருக்கிறது. அப்போது நீர்வளத் துறை அமைச்சராக இருந்தது யார்? ஏன் அணை கட்டவிட்டீர்கள் என்று கேட்க விரும்பவில்லை. அந்த மலிவு அரசியலை நான் செய்ய விரும்பவில்லை" என, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை மறைமுகமாகக் குறிப்பிட்டு திமுகவை அட்டாக் செய்தார்.
தனது கேஷுவலான பாணியில், "குறுவை சாகுபடிக்கான நிவாரணத்தை ஏற்கனவே வழங்கிவிட்டோம்" என்று கூறிவிட்டு, 10 வினாடிகள் அமைதியாக இருந்தார். பின்னர், "'அரசியலே நாங்கதான்' எனச் சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது எனத் தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்" என உதயநிதியைத் தாக்கினார்.
அசராத உதயநிதி, "சிறப்பு நிதியாக நீங்கள் 130 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். அது எல்லா ஆட்சியிலும் கொடுக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், அவர்கள் வறட்சி நிவாரண நிதி கேட்கிறார்கள். அதற்கான வித்தியாசத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காலையில் பேப்பர் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகளிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" எனப் பதிலடி கொடுத்தார்.
இந்தக் கேள்விக்கு செங்கோட்டையன் எழுந்து, "வறட்சிப் பாதிப்புகளை வழக்கமாக செப்டம்பர் மாத இறுதியில்தான் கணக்கெடுப்பார்கள். அதுதான் வழக்கம்" என்றார்.
இந்த வார்த்தைப் போரில் முதலமைச்சருக்குக் கேடயமாக இருந்தது அமைச்சர்கள்தான் எனலாம்.
"கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்கவே இல்லை" எனப் பேசத் தொடங்கிய சௌமியா அன்புமணி, முதலமைச்சரின் ‘பேசிப் பார்க்கும்’ முயற்சிகள் தேவையில்லை என்றும், வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அடித்துப் பேசினார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அன்புமணியின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று பேசிய அவர், கையில் டம்ளரை எடுத்து, "காவிரியில் அணை கட்டக்கூடாது என்பதுதான் நிலைப்பாடு. இதற்கு இடையில் எந்த முயற்சியும் தேவையில்லை" என உறுதியாகக் கூறி அமர்ந்தார். நேரலையில் பார்க்கும்போது, "அதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்" என எக்கோ அடித்தது.
முன்னாள் அமைச்சர் ரகுபதி, தவெக அரசைக் கடுமையாக விமர்சித்தார். அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதாகக் குற்றம்சாட்டினார். அவர் பேசத் தொடங்கியதுமே, விதண்டாவாதமாகப் பேசுவதாக அமைச்சர் ராஜ் மோகன் குற்றம்சாட்டினார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "நீங்கள் கொடுத்துள்ள கடிதத்தை ஒட்டி மட்டுமே பேச வேண்டும்" என அறிவுறுத்தினார்.
பனையூர் வாரச்சந்தை, 100 நாள் வேலைத் திட்டத்தில் சரண்டர் ஆனது முதல், பில் வாங்கும்போது பில் போடுவது வரை அனைத்தையும் வெளுத்து வாங்கினார்.
அவருக்குப் பதிலளிக்க முனைந்து, ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1,28,000 கடன் இருப்பதாகப் பேசி, ‘வாண்டடாக வண்டியில் ஏறி வாங்கிக் கட்டிக்கொண்டார்’ நிதியமைச்சர் மரிய வில்சன். திமுக சீனியர் கே.என். நேரு அவருக்கு வகுப்பெடுத்து அமர வைத்தார்.
ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தாலும், ரகுபதிக்கு சரியான கவுன்டர் கொடுத்த ஒரே அமைச்சர் ஆனந்த் மட்டுமே. "பழக்க தோஷத்தில் பில் (கமிஷன்) வாங்கியிருப்பீர்கள்" என அவர் பதிலடி கொடுத்தார்.
திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் புகழ்ந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது. "எங்கள் நட்பில் குறுக்கிடாதீர்கள்", "எனக்கு சீட் வாங்கிக் கொடுத்தது அவர்தான்" என அவர் பேச, குழம்பிய அமைச்சர் ஆனந்த், "அவர் சிவனேன்னு இருக்கிறார், அவரை ஏன் இழுத்துவிடுறீங்க?" எனக் கேட்டார்.
டாஸ்மாக் ஊழல் குறித்த விவாதத்தின்போது, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மது உற்பத்தி நிறுவனம் நடத்துவதாகக் குறிப்பிட்டுப் பேசினார் ஆதவ் அர்ஜுனா.
இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ஒரு திமுக உறுப்பினர் லாட்டரி நிறுவனம் குறித்து பேச, "லாட்டரி நிறுவனத்தில் 900 கோடி வாங்கியது ஏன்? தைரியம் இருந்தால் சொல்லுங்கள். நான் எந்தத் தொழிலிலும் இல்லை" எனப் பேசினார்.
அதற்குப் பதிலளித்த உதயநிதி, "அதைக் கொடுத்தது அமைச்சருடைய மாமனார்தான். அவரிடம் கேட்டு விளக்கத்தைத் தெரிந்துகொள்ளட்டும்" என்றார்.
உடனடியாக ஆதவ் அர்ஜுனா, "அது அவருக்கும் உங்கள் அப்பாவுக்கும்தான் தெரியும். அப்பாவை இங்கே காணோம். வீட்டுக்குப் போய்க் கேளுங்கள்" என நெத்தியடி பதிலடி கொடுத்தார்.
இப்படியாக, திரில்லர், காமெடி, புகழ்ச்சி, இகழ்ச்சியுடன் நிறைய ‘Rage bait’-களால் நிறைந்திருந்தது சட்டமன்றம்.
சட்டமன்றத்தில் இரண்டு கட்சிகளும் பர்ஃபாமன்ஸ் செய்ய முயற்சி செய்தாலும், அதற்குப் பிறகான ஆன்லைன் எடிட் போட்டியில் தவெக வெற்றி பெற்றது. திமுக ஐடி விங் இந்த விஷயத்தில் இன்னும் பின்தங்கியே இருக்கிறது. அதிமுகவுக்கு கோதாவில் இறங்கவே வாய்ப்பு கிடைக்காதது துரதிர்ஷ்டம் தான்.
மக்களுக்குத் தேவையான விவகாரங்களை ‘நச்’ என்று பேசி, சட்டமன்றத்திலும் மக்களிடத்திலும் கவனிக்கப்பட்டார் சௌமியா அன்புமணி!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்