தமிழ்நாடு

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரைச் சேர்க்க வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் பெயரைச் சேர்க்க, மருத்துவமனை அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு வழங்கிய பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாகும்

Muthu Lakshmi

தமிழகத்தில் குடும்ப அட்டை எனப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு மூலம் பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும் இந்த அட்டை பல்வேறு அரசு அலுவலகங்களில் சரிபார்ப்பு ஆதாரங்களாக முக்கிய பாக்கு வகிக்கிறது. இந்தக் குடும்ப அட்டையில் புதிததாக பிறந்த குழந்தையின் பெயரை சேர்ப்பது, திருமணத்திற்குப் பிறகு புதிய உறுப்பினரை சேர்ப்பது, ஏற்கனவே உள்ள உறுப்பினரின் பெயரை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ள முடியும். இதற்காகத் தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான TNPDS மூலம் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

குடும்ப அட்டையில் புதிய உறுப்பினரைச் சேர்க்க விரும்புவோர் எவ்வாறு விண்ணப்பிப்பது, என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், விண்ணப்பத்தின் நிலையை எப்படி சரிபார்ப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.

முதலில், TNPDS அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று அங்கு குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான சேவைகளில் (மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்) “உறுப்பினரை சேர்க்க” எனும் ஆப்ஷனை தேர்வு செய்யவும். புதிய உறுப்பினரைச் சேர்க்கும் சேவையைத் தேர்ந்தெடுத்து, குடும்ப அட்டை தொடர்பான விவரங்களை உள்ளிட வேண்டும்.

அதன்பிறகு, அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை உள்ளிட்டு கொடுப்பட்டுள்ள கேப்சாவை நிரப்ப வேண்டும். பின்னர் குடும்பத் தலைவரின் விவரங்கள் மற்றும் அட்டை எண் உள்ளிட்ட தகவல்களைப் நிரப்ப வேண்டும். தொடர்ந்து, குடும்ப அட்டையில் புதிதாகச் சேர்க்க வேண்டிய நபரின் பெயர், ஆதார் எண் மற்றும் தேவையான பிற விவரங்களையும் உள்ளிட வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்படும் விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு, சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் அட்டை அல்லது அவரின் பிற ஆவணங்களின் நகல்களை பதிவேற்ற வேண்டும். அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு, மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

குடும்பத்தில் புதிதாகச் சேர்க்கப்படும் நபரின் நிலையைப் பொறுத்து தேவையான ஆவணங்கள் மாறுபடும். புதிதாகப் பிறந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் பெயரைச் சேர்க்க, மருத்துவமனை அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு வழங்கிய பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாகும். குழந்தைக்கு ஆதார் அட்டை இருந்தால் அதையும், பெற்றோரின் ஆதார் விவரங்களையும் பயன்படுதலாம்.

புதிதாக திருமணமானவர்களுக்கு குடும்ப அட்டையில் பெயரைச் சேர்க்க விரும்பினால், அவர்களின் பெற்றோர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான சான்று அல்லது தடையில்லாச் சான்று, திருமணச் சான்றிதழ் மற்றும் தேவையான ஆதார் விவரங்கள் கேட்கப்படலாம்.

வயது வந்த குடும்ப உறுப்பினர்களின் பெயரை சேர்க்க ஆதார் அட்டை மற்றும் அடையாள விவரங்கள் தேவைப்படலாம். விண்ணப்பத்தின் தன்மையைப் பொறுத்து வாக்காளர் அடையாள அட்டை அல்லது வங்கிக் கணக்குப் புத்தகம் போன்ற கூடுதல் ஆவணங்களும் கேட்கப்படலாம். விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணத் தேவைகளை சரி பார்ப்பது நல்லது.

ஏற்கனவே வேறு குடும்ப அட்டையில் பெயர் இருந்தால், தற்போது குடும்ப அட்டையில் புதிய உறுப்பினரைச் சேர்ப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் பெயர் ஏற்கனவே வேறொரு குடும்ப அட்டையில் இடம்பெற்றிருந்தால், முதலில் அந்தக் குடும்ப அட்டையிலிருந்து அவரது பெயரை நீக்குவதற்கான நடைமுறையை முடிக்க வேண்டும். அதன் பிறகே புதிய குடும்ப அட்டையில் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, திருமணத்திற்குப் பிறகு கணவரின் குடும்ப அட்டையில் பெயரைச் சேர்க்கும் பெண்கள், பெற்றோர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது விண்ணப்ப நடைமுறையை எளிதாக்கும்.

விண்ணபித்த பிறகு, அதன் நிலையை எப்படி சரிபார்ப்பது?

விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அதற்கான குறிப்பு எண் வழங்கப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் விண்ணப்பம் தொடர்பான தகவல் வரலாம். இந்தக் குறிப்பு எண்ணைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பயன்படுத்தி TNPDS இணையதளத்தில் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையைச் சரிபார்க்கலாம்.

பொதுவாக, குடும்ப உறுப்பினரைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகள் செயல்படுத்தப்படுவதற்கு ஒன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இது கோரிக்கையின் தன்மை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளைப் பொறுத்து மாறுபடலாம். நான்கு நாட்களுக்குப் பிறகும் விண்ணப்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால், விண்ணப்பக் குறிப்பு எண்ணுடன் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தை நேரில் அணுகி விவரங்களைக் கேட்டறியலாம்.

எனவே, குடும்ப அட்டையில் புதிய உறுப்பினரைச் சேர்க்க விரும்புவோர், தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொண்டு, TNPDS இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தவறான விவரங்களைப் பதிவு செய்வதைத் தவிர்த்து, சமர்ப்பிப்பதற்கு முன்பு அனைத்து தகவல்களையும் கவனமாகச் சரிபார்ப்பது அவசியம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்