தமிழ்நாடு

“கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” – மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்! ஆ.ராசா ட்வீட்டுக்கு எதிரொலியா?

ஆ. ராசாவின் தொடர்ச்சியான இந்த ட்வீட்கள் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தையும் விமர்சனத்தையும்

Muthu Lakshmi

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது. தற்போது தவெக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 35 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 அமைச்சர் பதவி மற்றும் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

இதற்கு எதிர்க்கட்சியிலிருந்து சிலர் எதிர்ப்பு தெரிவித்து, விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர். திமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகள் தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி ஆட்சியில் இணைந்துள்ளன. இதனால் விரக்தியடைந்த எதிர்க்கட்சி தொண்டர்களும் அரசியல் தலைவர்களும் அவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஆ ராசா வெளியிட்ட விமர்சன ட்வீட்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கூட்டணி கட்சிகளை குறித்த அவரது பதிவு பெரும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், அந்த பதிவை நீக்கிய அவர் பின்னர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார். பெண்களை அவமதிக்கும் வகையில் அவர் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு அந்த பதிவும் நீக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அவர் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், “என் வீட்டுத் தோட்டத்தில் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ‘முடத்தெங்கு’! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!” என குறிப்பிட்டிருந்தார். ஆ. ராசாவின் தொடர்ச்சியான இந்த ட்வீட்கள் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில், முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. வன்னி அரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். மேலும், “தங்களது அரசியல் முடிவை தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும் வகையில் கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பான வேண்டுகோள்” என கட்சி தொண்டர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

அதோடு, “பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்” எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.