“ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு!” - அமைச்சராகும் விசிக வன்னி அரசு.. திமுக கூட்டணியில் தொடர்வது சாத்தியமா?

இப்போது அம்பேத்கரின் கனவு நோக்கி நாங்கள் நகர்கிறோம்
வன்னி அரசு
Published on
Updated on
2 min read

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஜோசேப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. நேற்று 23 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இன்று மேலும் இரண்டு முக்கிய கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படுவது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில் 23 புதிய அமைச்சர்களுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேரும், பட்டியலின சமூகத்தை சேர்ந்த 7 பேரும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், தமிழ்த்தாய் வாழ்த்தை விட “வந்தே மாதரம்” பாடலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், அமைச்சரவையில் இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்த ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இரண்டு முக்கிய துறைகளுக்கான அமைச்சர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “இன்று மாலைக்குள் முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்திருந்தார். மேலும் இதற்கிடையில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. “விசிகவும், ஐயூஎம்எலும் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்பது தனிப்பட்ட கருத்து அல்ல; அது முதலமைச்சரின் எண்ணமே” என அவர் வெளிப்படையாக கூறியிருப்பது கூட்டணிக்குள் புதிய அரசியல் சமநிலையை உருவாக்கியுள்ளது.

அதன்படி, விசிகவை சேர்ந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு  இன்று காலை 10 மணிக்கு அமைச்சராக பதவியேற்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜகான் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தஞ்சை பாபநாசம் தொகுதியை சேர்ந்த ஷாஜகானின் பெயரை ஐயூஎம்எல் கட்சி பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் தமிழக அமைச்சரவையில் பங்கு பெறுகிறது விசிக கட்சி. அரசியல் ரீதியாக பார்க்கும்போது, இது சாதாரண அமைச்சரவை விரிவாக்கம் அல்ல என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வந்த விசிக, தற்போது நேரடியாக ஆட்சியின் ஒரு பகுதியாக மாறுவது கூட்டணிக்குள் அந்த கட்சியின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தும் என பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை மீண்டும் தலித் பிரதிநிதித்துவத்திற்கு ஒதுக்கப்படுவது முக்கிய அரசியல் சின்னமாக கருதப்படுகிறது.

அதையடுத்து அமைச்சராகும் வன்னி அரசு “ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் தலைவரின் முழக்கம், தற்போது அது நிறைவேறுகிறது. அவர் நடக்காத எதையும் சொல்வதில்லை. எல்லா பூட்டுகளுக்கும் சாவி அதிகாரம் தான் என அம்பேத்கர் சொல்லியுள்ளார். இப்போது அம்பேத்கரின் கனவு நோக்கி நாங்கள் நகர்கிறோம். தமிழகத்தில் விசிக தான் மையம் என்பதை எங்கள் தலைவர் நிரூபித்துள்ளார். அமைச்சர் பதவியில் மக்கள் பாராட்டும்படி, நேர்மையான வகையில் செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com