sengottaiyan  
தமிழ்நாடு

அதிமுக -வில் தலைதூக்கும் வாரிசு அரசியல்!? “அவரு மகன், மருமகன், மச்சான் தான் எல்லாம் பண்றாங்க..” -செங்கோட்டையன் பகீர்!!

மனோஜ் பாண்டியன் தி.மு.க சென்றது அவரது விருப்பம்....

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.

செங்கோட்டையன் நீக்கம்!

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான அதிமுக பலவீனமான ஒன்று  என்பதை தமிழ் நாடு நமக்கு அறிந்தது. அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்குள்ளாகவே வருடங்கள் ஓடிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு போராட்ட குழுவினரால் பாராட்டு விழா நடைபெற்றபோது மோதல் வெளிப்படையானது. 

இதற்கு இடையில் கடந்த செப் 15 -ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க முயற்சி எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் எடுப்பேன் என எச்சரிக்கும் தொனியில் கெடு விதித்து எடப்பாடியை கடுப்பேற்றியிருந்தார். அப்போது எடப்பாடி தேர்தல் சுற்றப்பயணத்தில் இருந்தார், ஆனாலும் கூட கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து செங்கோட்டையனை கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும், நீக்கி உத்தரவிட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களோடு தொடர்புகொள்ளக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார். 

ஆனால் இதற்கு பிறகு அதிமுக -விலிருந்து எடப்பாடியால் ஒதுக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றிணையப் போகிறது  என்ற பேச்சுக்கள் எழுந்தன. 

இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில்தான்,  நேற்றைய தினம், முத்துராமலிங்க தேவரின்  நினைவு தினத்தை முன்னிட்டு பசும்பொன்னிற்கு, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த செயல் கட்சி கட்டுப்பாட்டை மீறியதோடு எடப்பாடியையும்  கடுப்பேற்றியதாக கூறப்படுகிறது..  மேலும் நேற்று காலை மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் ஒரே காரில் பசும்பொன் கிராமத்துக்கு வந்தனர். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ -வான செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.. “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்” செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக எடப்பாடி அறிவித்திருந்தார்.

செங்கோட்டையன் பதில்!!

“புரட்சி தலைவரின் காலத்திலும் சரி புரட்சி தலைவி அம்மாவின் காலத்திலும் சரி இயக்கத்திற்காக அயராது உழைத்தவன் நான், அம்மாவின் மறைவிற்கு பிறகு எனக்கு இரண்டு முறை வாய்ப்புகள் கிடைத்திருந்தது இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காகவும் இயக்கத்திற்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது எனவும் நான் எனது வாய்ப்புகளை விட்டுக் கொடுத்துவிட்டேன்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளரான பிறகு 2019 ல் இருந்து அவர் எடுத்த முடிவின் காரணமாகதான் கழகம் தோற்றுவிட்டது” என பேசியிருந்தார்.

இந்த சூழலில் கோவை விமான நிலையத்தில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், அதிமுக -வில் வாரிசு அரசியல் தலைதூக்குகிறது என பேசியிருக்கிறார். “ என்ன நடக்கிறது எல்லாருக்கும் தெரியும் . நான் அதிமுக -வில் 53 ஆண்டுகளாக இருக்கிறேன். பா.ஜ.க என்னை இயக்கவில்லை யாரும் என்னை இயக்க முடியாது.

மனோஜ் பாண்டியன் தி.மு.க சென்றது அவரது விருப்பம். அதிமுக -வின் கட்சி விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் தலையிடுகிறார். மைத்துனர் எல்லா பக்கமும் வருகிறார், மருமகன் தலையிடுகிறார். அவர்கள் தலையிடுவது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கிறது” என பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.