தமிழ்நாடு

'ஈஸ்டர்' தாக்குதல் இன்றோடு 4 வருடங்கள் நிறைவு...! நீதி கோரும் போராட்டம் இன்னும் தொடர்கின்றது...!

Malaimurasu Seithigal TV

சர்வதேச அளவில் இலங்கையின் நன்மதிப்பை, கடுமையாக பாதித்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என வாடிகன் முதல் சர்வதேச நாடுகள்  வரையில் முறையிடப்படுகிறது.

கடந்த 2019 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி  காலை வேளையில், கிறிஸ்தவ மக்கலின் வழக்கமான  ஈஸ்டர் ஞாயிறு  ஆராதனைகளுக்காக, தேவாலயங்களில் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது, காலை 8.45 அளவில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியனவற்றில், ஒரே நேரத்தில், தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தினர்.

அதேநேரம், கொழும்பின் முன்னணி விருந்தகங்களான ஷெங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் லேக்சைட் உள்ளிட்ட விருந்தகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்குள், இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250 -ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500 பேர் வரையில் காயமடைந்தனர். இந்த சம்பவமானது,  இலங்கையில் மட்டுமல்லாது, உலக அளவிலும் பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு,  இலங்கையின் நன்மதிப்பை கடுமையாக பாதிக்கும் சம்பவமாகவும் அது மாறியது. எனினும், இன்றுவரை இந்தத் தாக்குதல்களுக்கு மூல காரணம் யார் என்பது, விசாரணைகளில் கண்டறியப்படவில்லை.

உள்நாட்டில், கத்தோலிக்க சபை, இந்த விஷயத்தில் நீதி கோரி, சர்வதேசத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.எனினும், அரசாங்கம், விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக பதிலளித்து வருகிறது. இவ்வாறிருக்க, உயிரிழந்தவர்களுக்கு நீதிக்கோரி, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் வரை மக்கள் தொடர் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபட்டார்கள். எனினும் இன்று  வரையிலும் இந்த துயர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது. 

இதனையடுத்து, தற்கொலை தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு இடம்பெற்றது.