ttv vs eps  
தமிழ்நாடு

“எடப்பாடி ருசி கண்ட பூனை போல ஆட்சி அதிகாரத்திற்காக அலைகிறார்” டிடிவி தினகரன் கடும் தாக்கு!!

கரூர் சம்பவத்திற்கு ஆளும் கட்சி தான் காரணம் என்னும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது தரம் தாழ்ந்த அரசியல்.....

Saleth stephi graph

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 11 அதிமுக -வும் பாஜக -வும் தங்களின் கூட்டணியை உறுதி செய்தன. ஆனால் கூட்டணி வைத்த  நாளிலிருந்தே அதிமுக -பாஜக கூட்டணி அடிமட்ட அளவில் ஒன்றிணையவில்லை என்ற கூற்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சரிசெய்து இப்போதுதான் இரு கட்சிகளும் தங்களின் ஒற்றுமையை உறுதி செய்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில், NDA கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக கழன்றுகொண்டு வரும் போக்கும் நிகழ்கிறது.

ஆனால் NDA கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன், விஜய் -யோடு கூட்டணி வைப்பார் என கிசுகிசுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவரிடம் கரூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அப்போது பேசிய அவர், 

“எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை அநாகரிகமாக இருக்கிறது இது கூட்டணி குறித்து பேசக்கூடிய நேரமா விஜய் கூட்டணி குறித்து பேசும் மனநிலையில் இருப்பாரா? எப்படியாவது ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்தாமல் ஓயாது.

இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யும் வகையில் மோசமான விதத்தில் சில தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

 இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கரூர் சம்பவத்திற்கு ஆளும் கட்சி தான் காரணம் என்னும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது தரம் தாழ்ந்த அரசியல்.

 பழனிச்சாமிக்கு இணையாக பாஜகவும் அரசியல் செய்வது வருத்தமாக இருக்கிறது.

தயவுசெய்து இந்த கொடிய மரணத்தை அரசியலாகாமல் இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க கட்சிகளோ சமூக அமைப்புகளோ இதை பாடமாக வைத்து கையாள வேண்டும்.

 விஜய்க்கோ அவரை சுற்றி உள்ளவர்களுக்கோ போதிய அரசியல் தெளிவு இல்லாததன் காரணமாக சம்பவம் நடைபெற்றதாக தான் கருதுகிறேன்.

இந்த சம்பவத்திற்கு தவெக  தார்மீக பொறுப்பேற்று இருக்க வேண்டும் இதில் சதி இருப்பும் போல பேசுவது. யாரோ பின்புலத்தில் இருந்து இயக்குகிறார்களோ என்று தோன்றுகிறது.கரூர் சம்பவத்தை பொருத்தவரை முதல்வர் நிதானமாக தான் கையாளுகிறார். இதன் மூலம் வருங்காலத்தில் இதுபோன்று நடைபெற கூடாது என்ற அவரது பொறுப்புணர்வு தான் எனக்கு தெரிகிறது.

விஜய் ஜோசப் விஜய்யாக இருந்தால் தான் என்ன தவறு தமிழகத்தை பொறுத்தவரை ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தான் எல்லோரையும் பார்ப்பார்கள்.இதனால் 2026 தேர்தலில் எந்த மாற்றமும் வந்து விடப் போவது கிடையாது என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும்

 எனக்கு அண்ணா திமுக மீது எந்த வித  விரோதமும் கிடையாது. அண்ணா திமுக ஏ டி எம் கே கிடையாது எடப்பாடி உடைய இடிஎம்கே தான்” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.