Elachipalayam Bus Accident 
தமிழ்நாடு

“ஒரே நேரத்தில் பறிபோன நான்கு உயிர்கள்” - சில நொடிகளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை.. மகள்களின் சடலத்தை பார்த்து கதறிய தந்தை!

முத்தாயம்மாள் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக அவர்களது இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள சக்கரம்பாளையம் போயர் தெரு பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் மற்றும் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் ஆகியோர் ராசிபுரம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து தனுஸ்ரீ, நிவேதா, அபிநயா உள்ளிட்ட 4 பேர் டி.வி.எஸ். 50 இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ராசிபுரம் திருவள்ளுவர் கல்லூரியில் இருந்து வந்த மற்றொரு மாணவி, லிப்ட் கேட்டு அவர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதாக தெரிகிறது.

4 பேரும் சக்கரம்பாளையம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த முத்தாயம்மாள் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக அவர்களது இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற இருவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தவர்களில் சுபிதா கல்லூரி மாணவி என்பதும், நிவேதா, தனுஸ்ரீ, அபிநயா ஆகிய மூவரும் பள்ளி மாணவிகள் என்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் 6, 7 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயின்று வந்ததாகவும், மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து எலச்சிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டதற்கான காரணம், கல்லூரி பேருந்தின் வேகம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று உயிரிழந்த மாணவிகளின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சக்கரம்பாளையம் பகுதியில் கல்லூரி பேருந்து மோதி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவமும், அதில் மூன்று சிறுமிகள் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்