தமிழ்நாடு

நெல்லையில் தேர்தல் புறக்கணிப்பு: பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு!

தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து நேற்று வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் பொதுமக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை

Muthu Lakshmi

திருநெல்வேலி வட்டம் நாரணம்மாள்புரம் பகுதி சேர்ந்த தாதனூத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அங்கு கல்குவாரி செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால், கல்குவாரியின் அனுமதி உரிமத்தை ரத்து செய்ய
வலியுறுத்தி, தாதனூத்து ஊர் மக்கள் ஊருக்கு வெளியே இன்று ‘2026 தமிழக சட்ட மன்ற தேர்தல் புறக்கணிப்பு’ என போர்டு வைத்துள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றபடாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை எதையும் அனுமதிக்காமல் மக்கள் எதிர்த்து வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து பிரச்சாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். சில கிராமங்களில் இதுவரை நிறைவேற்றாத கோரிக்கைகளை குறிப்பிட்டு தேர்தல் புறக்கணிப்புகளையும் அறிவித்து, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையடுத்து தாதனூத்து பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி பிரச்சனைகாரணமாக, வரவிருக்கும் தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து நேற்று வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் பொதுமக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது, அதே ஊரைச் சேர்ந்த காவுமுத்து (வயது 55) என்பவருக்கும், அவரது உறவினரான ஆனந்த் (வயது 35) என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆக்கியுள்ளது. இதில் ஆனந்த் தாக்கியதில் கீழே விழுந்த காவுமுத்துவுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ஆனந்த் மீது காய வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காவுமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். காவுமுத்துவுக்கு ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், அவரது இறப்பிற்கான உண்மையான காரணம் குறித்து தாழையூத்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.