ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50? '2100 மெகா வாட்' வாங்க செலவு என்னவாகும்.. அதிர்ச்சி செய்திக்கு அமைச்சர் விளக்கம்! 
தமிழ்நாடு

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50? '2100 மெகா வாட்' வாங்க செலவு என்னவாகும்.. அதிர்ச்சி செய்திக்கு அமைச்சர் விளக்கம்!

"வரவிருக்கும் 20 ஆண்டுகளுக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்களை வெளியிடுவோம்." எனக் கூறியுள்ளார் அமைச்சர் நிர்மல் குமார்.

Antony Ajay R

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு வெளிச்சந்தையில் ஒரு யூனிட் ரூ.41.50-க்கு மின்சாரம் வாங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை அதிகப் பயன்பாடு உள்ள நேரத்தில் தேவைப்படும் 2100 மெகா வாட் மின்சாரத்தை இந்த விலையில் வாங்க இருப்பதாகக் கூறப்பட்டது.

ஏற்கெனவே அக்டோபர் மாதத்திற்கான மின்சாரத்தை ஒரு யூனிட் ₹37 என்ற விலையில் கொள்முதல் செய்வது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், திறந்த சந்தையில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதால் ஒரு நாளைக்கு ₹5 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறினார்.

தற்போது கொள்முதல் விலை ஒரு யூனிட்டுக்கு ₹41.50 ஆக உயர்ந்துள்ளதால், இந்தச் செலவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. இந்த நிலையில் இவ்வளவு அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்போவாதில்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "ரூ.37 முதல் ரூ.41 வரையிலான விலையில் நாங்கள் மின்சாரம் கொள்முதல் செய்யப் போவதில்லை.

நாங்கள் இன்று டெண்டர்களை திறந்துள்ளோம், பல விற்பனையாளர்கள் மிக அதிக விலைகளைக் கோரியுள்ளனர்.

அடுத்த 3 மாதங்களுக்குச் சமாளிக்க எங்களிடம் போதுமான மின்சாரம் இருப்பதாலும், அடுத்த கோடைக்காலத்திற்காக மின்சாரம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்படுவதாலும், இந்த விலைகள் நியாயமற்றவை.

இதற்கிடையில், வரவிருக்கும் 20 ஆண்டுகளுக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்களை வெளியிடுவோம்." எனக் கூறியுள்ளார்.

மேலும், "எனவே, இனிமேல் அதிக விலைக்கு எரிவாயு கொள்முதல் செய்யப்படாது, மேலும் கீழ்க்காணும் டெண்டரை ரத்து செய்யுமாறு நான் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.

மின்வாரியம் 37.5 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதாகக் கூறப்பட்டபோதே பல தரப்பில் இருந்து அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்