

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் வலிப்பு வருவதாக ஏமாற்றி காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
காலை முதலே தேடுதல் வேட்டை நடத்திவரும் காவல்துறை மதியத்துக்குள் 5 பேரை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. இப்போது ட்ரோன் கருவியைப் பயன்படுத்தி ஒன்றாக தப்பித்திருந்த 8 கைதிகளை பிடித்துள்ளனர்.
தேனி கிளைச் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும், வாகனத் தணிக்கை மற்றும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
"ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்புப் பணிக்குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன." என்று காவல்துறை கூறியுள்ளது.
மீதமுள்ள 4 கைதிகளைக் கண்டறிந்து பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
தேனியில் ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உள்துறை செயலாளர், தமிழக காவல்துறை இயக்குனர், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த பல்வேறு உயர்மட்ட அதிகாரிகள் காலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக கைதிகள் தப்பி ஓடியது குறித்து சிறைத்துறை விளக்கம் அளித்தது.
அதில், "தேனி மாவட்டச் சிறைச்சாலையானது 10.012019 முதல் தேக்கம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இச்சிறைச்சாலையின் அங்கீகரிக்கப்பட்ட கைதிகள் தங்கும் கொள்ளளவு 200 ஆகும். 26.10.2026 அன்று, இச்சிறைச்சாலையில் மொத்தம் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இரவு சுமார் 10.00 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் உள்ள ஒரு கைதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சில கைதிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து, மூன்றாவது பிளாக்கின் பாரா காவலராகப் பணியாற்றிய ஸ்டாலின் பிரபு (இரண்டாம் நிலைக் காவலர் எண். 15). அந்தக் கைதிக்கு எதேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக உள்ளே சென்றார். அப்போது, கைதிகள் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்து, சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களின் முயற்சியை பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், கைதிகள் காவலர்களைத் தாக்கி, சாவிகளைப் பறித்து, பிரதான நுழைவாயிலைத் திறந்து கொண்டு தப்பிச் சென்றனர்.
தப்பிச் சென்ற 17 கைதிகளின் விவரங்கள் பின்வருமாறு :
1 லிங்கபிரசாத், த/பெ ஜெகநாதமூர்த்தி
2. சோலை முகிலேஸ்வரன், த/பெ நாகலிங்கம்
3. ராஜா சிக்கந்தர்,த/பெ.அப்துல் ரசாக்
4. மீனாட்சிசுந்தரம். த/பெ கருப்பண்ணன்
5. சிலம்பரசன், த/பெ செல்வகுமார்
6.கருப்பசாமி, த/பெமுருகன்
7. சபரிநாதன், த/பெ பழனிசுந்தரம்
8. பொன்முத்துசெல்வம். த/பெ பொன்னுசாமி
9. நிஷாந்த்,த/பெ காந்தி
10. பிரவீன்குமார். த/பெ தமிழ்ச்செல்வன்
11 முத்துஇளங்கோவன், த/பெ முருகன்
12 ரெஜின், த/பெரவி
13.தருண்குமார். த/பெ சின்னர்
14. திருப்பதி த/பெ கருப்பண்ணன்
15. ராஜ்குமார்.த/பெகலைஅரசன்
16. பாண்டிச்செல்வம். த/பெ சக்திவேல்
17. கார்த்திக்ராஜா,த/பெ நாகராஜ்
இந்த சம்பவம் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்வதற்காக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைத் தலைவர் ஆர். கனகராஜ், மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் எ.முருகேசன், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ், மதுரை தெற்கு மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திரா பிதாரி, மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் அபினவ்குமார் மற்றும் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம், ஆகியோர் தேனி மாவட்டச் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்." எனக் கூறப்பட்டிருந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்