மதுராந்தக தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரான மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் இன்று (செப் 25) மக்கள் மத்தியில் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்தார்.
மக்கள் முன்னிலையில் பேசிய முதல்வர் விஜய், திமுக-வையும், அதிமுகவையும் கடுமையாக சாடி பேசினார். அதிலும் குறிப்பாக அதிமுக-வை மற்றும் பலர் என்று விமர்சித்து பேசினார். மதுராந்தகம் தொகுதி மக்களின் தேவைகள் என்ன? என்பது குறித்து பேசிய பின்னர், முதல்வர் விஜய் மக்கள் மத்தியில் சில விஷயம் குறித்து பேச முனைந்தார்.
அப்போது பேச தொடங்கிய அவர், "உங்களிடம் நான் ஒரு மிகப்பெரிய வேதனையான விஷயத்தை பகிர விரும்புகிறேன்" என்று பேச துவங்கினார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவிற்கு தங்கள் மீது எந்த ஒரு குற்றசாட்டினையும் வைக்கமுடியவில்லை என்பதால் 'ஒரு ஆபத்தான ஆயுதத்தை' கையில் எடுத்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "என் சொந்த தாயை.. என்ன பெத்த அம்மாவ.. அவங்க தப்பா பேசும்போது கூட நான் பொறுத்துகிட்டேன்.
ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய என் அம்மா, அக்கா, தங்கைகள், எனக்கு துணையாக இருக்கின்ற; எனக்கு தாயன்பு காட்டுகின்ற என்னுடைய தமிழ்நாட்டு பெண்களை அசிங்கமாக பேசும்போதுதான்.." என்று மக்கள் முன்னிலையில் உருக்கமாக பேசினார்.
மேலும் பேசிய அவர், "திமுக தலைமையும் இந்த மாதிரிதான் பேசுறாங்க, திமுக குடும்பத்தில் இருந்தும் இதுபோலத்தான் பேசுறாங்க, பழக்கதோஷத்தில் ஸ்டாலின் சாரும் அவரது குடும்பத்தில் இருப்பவர்களும் உட்கார்ந்து ரசிக்கிறார்கள். இனிமேல் பொறுத்துக்கொள்ளமுடியாது.
அதுமட்டுமில்லை, இன்னும் ஒரு கொடுமையான விஷயம் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அதுபற்றி பேசவேண்டாம் என்றுதான் நினைத்தேன்" என்று ஜெம் வீரமணி வழக்கு குறித்து பேச முனைந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நம் தமிழநாட்டு இளம்பெண்களை, அந்த பச்ச புள்ளைகளை ஒருத்தன் இத்தனை வருசமா சீரழிச்சிகிட்டு இருந்திருக்கிறான். அந்த வழக்கு போன திமுக அரசின்போது வந்திருந்தும், அந்த கேஸை, அந்த ஹிஸ்டரியை மூடி மறைத்துவிட்டார்கள்.
என்ன நடக்கிறது சொல்லுங்கள்? தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார், வாய் திறவுங்கள். உங்களுடைய கூட்டணியில் உள்ள 'மற்றும் பலரும்' வாய் திறக்காமல் இருக்கிறார்கள். இதுல கூடவா கூட்டணி, இதுல கூடவா கூட்டணி வைத்துக்கொண்டு வாய் திறக்காமல் இருக்கிறீர்கள்?
எப்போதும் பெண்கள் பாதுகாப்பிற்கென்றே பிறந்த மாதிரி திமுகவும், இந்த மற்றும் பலரும் பேசுவார்கள். அத்தனை பெண்களை சீரழித்தவனை நாம தூக்கி உள்ள வச்சுட்டோம்.
இப்போது அவனைப் பற்றியும் வாய் திறக்கவில்லை. அந்த ஆளைப் பற்றியும் வாய் திறக்கல. இத்தனை வருஷமா மூடி மறைச்சு வச்சிருந்த விஷயத்தை விஜய் தோண்டி வெளியெடுத்து அவனை உள்ள தூக்கி வச்சுட்டான். அந்த அதிர்ச்சியில் வாய் திறக்காமல் இருக்கிறார்களோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை.
எல்லாம் பச்ச குழந்தைங்க சார். அவர்களுடைய வலியைப் பற்றி வந்து வெளியில பேச முடியலைன்னா, அப்புறம் என்ன அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க? இத்தனை வருஷமா என்ன அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க?" என்று ஆவேசமாகவும், உருக்கமாகவும் பேசினார்.
அதனால் மக்களே, வருகின்ற தேர்தலில் இவர்களுக்கும், இந்த திமுக கூட்டணி மற்றும் பலருக்கும் நீங்கள் சரியான பாடத்தை புகட்டியாக வேண்டும். நம்முடைய சின்னம்... விசில் சின்னம்..." என வாக்கு கேட்டு தனது தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்