Tarapuram by-election 2026 
தமிழ்நாடு

"எங்கிருந்து வந்தது இந்த டோக்கன்?" - தாராபுரத்தில் தவெக-வினரை முற்றுகையிட்ட அதிமுகவினர்! EVM கோளாறு முதல் டோக்கன் விநியோகம் வரை

வெளியூர் நபரின் காரில் இருந்து தவெக-வினர் டோக்கன் விநியோகிப்பதாக கூறி குற்றச்சாட்டினை முன்வைத்து அதிமுகவினர் வாக்குவாதம்.

Vinvizhi Leninton

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இந்த வாக்குப்பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க தற்போது தாராபுரம் கொட்டளிப்பாளையம் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வாக்களிக்க வந்தவர்கள் வெளியே காத்திருக்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தவெக-வினர் டோக்கன் விநியோகிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளன.

2026 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்யபாமாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில், அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் தங்களை இணைத்து கொண்டனர். அதன் பின்னர் அந்த தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தாராபுரத்தில், தவெக சார்பில் சத்யபாமா, அதிமுக சார்பில் பானுமதி, திமுக சார்பில் சுகன்யா, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போது (அக் 06) இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் இதற்கான வாக் கு எண்ணிக்கையானது அக் 09-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாராபுரத்தில் 320 வாக்குசாவடிகளும், அதில் 18 வாக்குசாவடிகளும் பதற்றமானவை என்று கூறப்பட்டுள்ள நிலையில் அங்கு போலீசார் மற்றும் மத்திய காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொட்டளிப்பாளையம் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், வாக்காளர்கள் வெளியே நிற்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தாராபுரத் தொகுதிக்குட்பட்ட வீராச்சி மங்கலத்தில் வெளியூர் நபரின் காரில் இருந்து தவெக-வினர் டோக்கன் விநியோகிப்பதாக கூறி குற்றச்சாட்டினை முன்வைத்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டோக்கன் வைத்திருந்த தவெக-வினரை முற்றுகையிட்டு அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவினரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், அமைதியான சூழலில் தாராபுரத்தில் இடைதேர்தலானது நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்