"தொடங்கியது இடைத்தேர்தல்.." ஐந்து முனை போட்டியில் வெல்லப்போவது யார்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவு!

வாக்குப்பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu by-election today
Tamil Nadu by-election today
Published on: 
Updated on: 
1 min read

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேலும், இந்த வாக்குப்பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்யபாமாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில், அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் தங்களை இணைத்து கொண்டனர். அதன் பின்னர் அந்த தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தற்போது மீண்டும், தவெக சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதோடு, தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் அவர்களுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இவர்களை தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் ஆகியோர் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

தாராபுரத்தில், தவெக சார்பில் சத்யபாமா, அதிமுக சார்பில் பானுமதி, திமுக சார்பில் சுகன்யா, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போது (அக் 06) இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கையானது அக் 09-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுராந்தகத்தில் 285 வாக்குசாவடிகளும், தாராபுரத்தில் 320 வாக்குசாவடிகளும், தட்டாஞ்சாவடி தொகுதியில் 31 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மதுராந்தகத்தில் 60 வாக்குசாவடிகளும், தாராபுரத்தில் 18 வாக்குசாவடிகளும் பதற்றமானவை என்று கூறப்பட்டுள்ள நிலையில் அங்கு போலீசார் மற்றும் மத்திய காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரத்தில் 1,07,285 ஆண்களும், 1,16,013 பெண்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும் என்று மொத்தம் 2,23, 306 வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகத்தில் 1,04,926 ஆண்களும், 1,08,797 பெண்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 2,13,788 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் 26,921 வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த தேர்தலானது 5 முனை போட்டியாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com