son and father  
தமிழ்நாடு

“மகன் இறந்த அதே இடத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை” - பார்த்து பார்த்து வளர்த்த குழந்தையின் உயிரிழப்பால் நடந்த விபரீதம்!

இரண்டு கறுங்கள் தூண்களுக்கு இடையில் லூங்கியைக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்...

Mahalakshmi Somasundaram

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த செட்டிபுண்யம் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதுடைய வெள்ளை என்கிற விநாயகம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 7 வயதில் யுவராஜ் என்ற மகன் இருந்தார். விநாயகம் அவ்வப்போது கூலிக்கு லாரி ஓட்டியும் , குளத்து வேலைகளுக்கு சென்றும் குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார். மேலும் அவரது மனைவியும் ஓய்வு நேரங்களில் சிறு சிறு விவசாய வேலைகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வைத்த யுவராஜ், தினமும் பள்ளி முடிந்ததும் மாலையில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதேபோல் யுவராஜ் இரண்டு நாட்களுக்கு முன்பு, மாலை மூன்று மணியளவில் நண்பர்களுடன் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கிறார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுவனின் பெற்றோருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளித்திருக்கின்றனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு இரவு 7 மணியளவில் சிறுவனை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர். பின்னர் மறுநாள் உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர். 7 வயது மகன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்ட அவரது தந்தை விநாயகம் நேற்று மன அழுத்தம் அதிகமாகி மகன் தவறி விழுந்து உயிரிழந்த அதே கிணற்றில் ஏற்றத்திற்கு பயன்படுத்தும் இரண்டு கறுங்கள் தூண்களுக்கு இடையில் லூங்கியைக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அனால் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் விநாயகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவலின் அடிப்படையில் விநாயகத்தின் உடலை மீட்ட சிங்க பெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த நாட்களில் அப்பா, மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன அப்பா மகன்‌ இருவரது கண்களையும் கண்தானம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்