தமிழ்நாடு

தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி! அமைச்சராக பதவியேற்ற வன்னி அரசு மற்றும் ஷாஜகான்

திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான்

Muthu Lakshmi

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில், தமிழக அமைச்சரவையில் இணைக்கப்பட்ட 23 புதிய அமைச்சர்களுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று அரசின் பெரும்பான்மையை நிரூபித்தது. மே 16ஆம் தேதி முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அதன் பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று வரை மொத்தம் 33 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பதவியேற்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து  ஐயூஎம்எல் அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக அமைச்சர் வன்னி அரசுக்கு சமூக நீதி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை உள்ளடக்கியதாகும். தமிழகத்தில் முதல் முறையாக சமூகநீதி துறை எனும் இலாகா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இதற்கு முன்னதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என இருந்த துறைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியலில் கூட்டணி சமநிலையை பேணும் முயற்சியாக இந்த அமைச்சரவை விரிவாக்கம் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.