அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தவெக சார்பில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுமான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் ஜூலை 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இதற்கு முன்னதாக இருவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது கையெழுத்திட்ட ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகரிடம் வழங்கினார். இதேபோல், விராலிமலை தொகுதி முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் கடந்த ஜூன் 16ஆம் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
முன்னதாக, 4 அதிமுக MLA-க்கள் மே 25ஆம் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தனர். பதவியேற்று 20 நாட்களிலேயே மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல், பெருந்துறை MLA ஜெயக்குமார், தாராபுரம் MLA சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் MLA இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது அதிமுகவில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து தவெகவிற்கு வந்த முக்கிய நிர்வாகிகளுக்கு கட்சியில் அமைப்புப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவுக்கு தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கட்சியில் பல்வேறு நிர்வாகிகளுக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
1. திருமதி. K. மரகதம் குமரவேல் ExMLA, மதுராந்தகம்
2. திரு. S. ராஜகோபால், நாங்குநேரி
3. திரு. H. ஜாகீர் உசேன், அம்பாசமுத்திரம்
4. திரு. V. குமார் ITI, பல்லாவரம்
5. திரு. S. யுவராஜ், சிங்காநல்லூர்
6. திரு. C.V. தினகரன், திருப்போரூர்
7. திரு. K. மணிகண்டன். DCS, ஆவடி
8. திரு. R.S. மணிகண்டன், வீரபாண்டி
9. திரு. K. அருள்ராஜ், திருவெறும்பூர்
10. திரு. SDR. சாமுவேல் ராஜ் DCT, தூத்துக்குடி
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்