தமிழ்நாடு

சென்னை முதல் மதுரை வரை... அமைச்சர் பதவிக்காக முட்டி மோதும் தவெக எம்.எல்.ஏ.க்கள்

இந்த அமைச்சரவை விரிவாக்கம், கட்சியின் எதிர்காலத் திட்டங்களை எப்படி மாற்றப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...

மாலை முரசு செய்தி குழு

தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில், கட்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் எம்.எல்.ஏ.க்கள் பலரும் எப்படியாவது மந்திரி பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பதவிப் போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

பதவிப் போட்டியில் ஆர்.கே.நகர் மரிய வில்சன், சோழிங்கநல்லூர் சரவணன், ஸ்ரீரங்கம் ரமேஷ், அறந்தாங்கி பர்வேஸ், திருப்பூர் வடக்கு சத்தியபாமா, சேலம் தெற்கு பார்த்திபன், கோவை வடக்கு சம்பத்குமார், மதுரவாயில் ரேவந்த், நெல்லை ஆர்.எஸ்.முருகன், ராதாபுரம் சதீஷ் கிறிஸ்டோபர், தஞ்சை சரவணன், சோழவந்தன் கருப்பையா மற்றும் மதுரை மத்தி முஸ்தபா எனப் பெரிய பட்டியலே நீண்டு கொண்டிருக்கிறது.

இருப்பினும், அமைச்சரவை உருவாக்கத்தில் பல சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் ஏற்கனவே 5 அமைச்சர்களும், ஒரு அரசு கொறடாவும் இருக்கும் சூழலில், மீண்டும் ஒரு சென்னையைச் சேர்ந்த எம்.எல்.ஏவான மரிய வில்சன் மந்திரி பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் சத்தியபாமா கடும் முயற்சி எடுத்து வரும் அதே வேளையில், மத்திய அமைச்சர் எல்.முருகனைத் தோற்கடித்த கமலிக்கும் அதே மாவட்டத்தில் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.

மேலும், திருச்செங்கோட்டில் ஏற்கனவே அமைச்சர் அருண்ராஜ் பதவி வகிக்கும் நிலையில், ராசிபுரத்தைச் சேர்ந்த லோகேஷ் தனபால் மீண்டும் அந்த மாவட்டத்திலிருந்து அமைச்சரவை வாய்ப்பு கேட்டு காய் நகர்த்தி வருகிறார். இது தவிர, தற்போதைய நிலையில் 8 மாவட்டங்களில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. அந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை நியமிக்க வேண்டிய கட்டாயமும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இப்படிப் பலப்பரீட்சைகள் மற்றும் கோஷ்டி பூசல்கள் நிறைந்த இந்த அமைச்சரவை விரிவாக்கம், கட்சியின் எதிர்காலத் திட்டங்களை எப்படி மாற்றப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமைச்சரவைக்கான இறுதிப்பட்டியலில் யாரை வைப்பது, யாரை விடுவிப்பது என்ற குழப்பத்தில் தலைமை உள்ளது. சீனியர்களுக்கு முன்னுரிமையா அல்லது இளைஞர்களுக்கு வாய்ப்பா என்ற விவாதம் ஒரு பக்கம் சென்றாலும், வெற்றிக்கு உழைத்தவர்களைத் தள்ளி வைக்க முடியாது என்ற நெருக்கடியும் உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.