கடந்த டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் இன்று (மே 28) தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மாணவி அளித்த முதல் தகவல் அறிக்கை இந்நியத்தில் கடந்த டிசம்பர் 26 -ஆம் தேதி வெளியானது. பாதிப்பிற்கு உள்ளான மாணவி, தன்னைத் துன்புறுத்திய நபர் செல்போனில் யாருடனோ பேசியதாகவும் அவரை 'சார்' என அழைத்ததாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இதை வைத்து எதிர்க்கட்சிகள் "யார் அந்த சார்?" எனக் கேள்வியெழுப்பின.
''எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம்" என்று சென்னை காவல் ஆணையர் அருண் செய்தயாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு 5 மாதங்களில் வழக்கு விசாரிக்கப்பட்டு கடந்த 28-ஆம் தேதி ஞான சேகரனே குற்றவாளி எனவும் அவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தீர்ப்பை வரவேற்றாலும் அதே சமையத்தில் கடுமையாக விமர்சித்தும் உள்ளார்.
ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்?
"நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்த தொடர் முன்னெடுப்புகளின் ஊடாக, தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது?
ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?
-SIT-ல் பணியாற்றிய DSP ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?
இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான யார் அந்த SIR ? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது!
வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?
யாரைக் காப்பாற்ற இந்த வேகம்?
பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்!
SIR-ஐக் காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி ,அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.
எதிர்வினையாற்றிய ஸ்டாலின்
தண்டனை விபரம் அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X தலத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டிருந்தார், அதில்
“பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை! விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்.
தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச்சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்