கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சந்தித்து, அவர்களுக்கு அரசு பணிக்கான அரசாணை வழங்க உள்ளதாக தவெக அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து நாளை முதல்வர் விஜய் கரூருக்கு செல்ல உள்ளார். மேலும் அரசுத் துறையின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்குகிறார்.
மேலும் கரூரில் தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. முதல்வர் விஜய், அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கு பெற உள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவும், அதே போல பொது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, வெண்ணைமலை அட்லஸ் கலையரங்கம் அருகில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரம்மாண்டமான அரசியல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் பங்கேற்ற இந்தக் கூட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. கூட்ட ஏற்பாடுகளில் இருந்த குளறுபடிகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடரப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு சிபியை விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.