தமிழ்நாடு

முழு சங்கியாகவே மாறியுள்ளார ஈபிஎஸ்? என்டிஏ கூட்டணியை டப்பா என்ஜின் என்று சரமாரியாக விமர்சித்த ஸ்டாலின்! டீ பிரேக் -யோடு சூடு பிடித்த திருச்சி பிரச்சாரம்

அதிமுக கட்சியை அடிமை கூட்டமாக உருவாக்கியது தான் பழனிச்சாமியின் சாதனை.திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது..

மாலை முரசு செய்தி குழு

2026 தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியதையடுத்து, தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கியது. அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தொடங்கிய நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி மேற்கில் போட்டியிடும் கே என் நேரு, திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், திருவெறும்பூர் அன்பில் மகேஷ், லால்குடி பாரிவள்ளல், மண்ணச்சநல்லூர் கதிரவன், ஸ்ரீரங்கம் துரைராஜ், , முசிறி கருணை ராஜா, மணப்பாறையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி அப்துல் சமது ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதே போல  துறையூர் தொகுதி காங்கிரஸ் க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அங்கேயும் கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார். திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “நேற்று திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டேன். இன்று தீரர்கள் கோட்டமான திருச்சிக்கு வருகை தந்துள்ளேன். கடந்த மாதம் மாநாட்டிற்காக திருச்சி வந்தேன். இன்று மீண்டும் வந்துள்ளேன். நான் மீண்டும் மீண்டும் திருச்சிக்கு வருவது போல் திராவிட மாடல் அரசும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் முழு வெற்றியை தந்து இரண்டு சிறப்பான அமைச்சர்களை தந்துள்ளீர்கள். அதே போல வரும் தேர்தலிலும் நூறு சதவீத வெற்றியை தருவீர்கள் என்கிற நம்பிக்கை உள்ளது” என்றார்.

வேட்பாளர்களை முதலமைச்சர் அறிவித்த போது திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ், சிறுபான்மை மக்களுக்காக எதையும் பேசி சாதிக்க கூடிய ஆற்றலை பெற்றவர் கிழக்கு தொகுதி மக்களோடு இரண்டற கலந்தவர், வெயிட்டான வேட்பாளர் இனிகோ இருதயராஜ் என்றார். அப்போது அனைவரும் கரவொலி எழுப்பி சிரித்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் “பஸ் ஸ்டாண்ட் ஏர்போர்ட்டை மிஞ்சும் அளவிற்கு உள்ளது என பக்கத்து மாநிலத்தவர் வியந்து போய் வீடியோ போடும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து நிலையம், சூரியூரில் மினி ஸ்டேடியம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம், மணப்பாறையில் சிப்காட் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். டைடல் பூங்கா, ஒலிம்பிக் அகாடமி உள்ளிட்டவற்றை மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் நான் திறந்து வைக்க இருக்கிறேன். தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி வளர்ந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சாதி கலவரமோ, பா.ஜ.க ஆளும் மாநிலங்களை போல் மத கலவரமோ இல்லை, உத்தரபிரதேசம் போல் கும்பல் வன்முறை இல்லை. அதெல்லாம் வர வேண்டும் என பா.ஜ.க செய்த சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளோம்” என்றும் மேலும் பல நடைமுறையில் உள்ள திட்டங்களை குறிப்பிட்டும் உரையாற்றினார்.

அதை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை குறித்து பேசிய ஸ்டாலின் “தமிழ்நாடு முழுக்க இல்லத்தரசி திட்டம் குறித்து தான் பேச்சாக உள்ளது” என மழிச்சியை தெரிவித்தார். மேலும் “தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிய அதிமுகவிற்கும், இந்தியாவை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவும் இணைந்து அமைத்துள்ள கூட்டணியை இந்த முறையும் மக்கள் வீழ்த்த வேண்டும். சம்மந்திக்கு காண் ட்ரக்ட் கொடுக்கவே ஆட்சி நடத்தியவர் எடுப்பாடி பழனிச்சாமி. திமுக அரசின் திட்டங்கள் தரமானதாக இருக்கும். கலைஞர் ஆட்சியில் கொடுத்த டிவி இன்றும் பலர் வீட்டில் இயங்கி வருகிறது. அது கலர் டிவியாக மட்டுமல்லாமல் கலைஞர் டிவியாக உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

அதையடுத்து அதிமுக கூட்டணியையும் வாக்குறுதிகளையும் விமர்சித்த ஸ்டாலின் “மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என 2021 ல் தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்த போது தன் வீட்டில் உள்ள ஜெராக்ஸ் மிஷினை ஆன் செய்து அதை காப்பி அடித்து 1500 என அறிவித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அண்மையில் மதுரையில் ஒரு சம்பவம் நடந்தது என்.டி.ஏ ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் மதுரையில் அவர்கள் நடத்திய கூட்டத்திலிருந்து பெரியார் படம் அகற்றப்பட்டது. பா.ஜ.க கூறிய உடனே எடப்பாடி பழனிச்சாமி பெரியார் படத்தை அகற்றி உள்ளனர். அதிமுக கட்சியை அடிமை கூட்டமாக உருவாக்கியது தான் பழனிச்சாமியின் சாதனை.திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என சிரித்து கொண்டே கூறியவர் தான் பழனிச்சாமி. பா.ஜ.கவின் பாதம் தாங்கி தான் பழனிச்சாமி. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற காரணம் அதிமுக தான். பா.ம.கவின் அன்புமணியும் அதற்கு ஆதரவு தெரிவித்தார். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என கூறியவர் தான் பழனிச்சாமி. பழனிச்சாமி குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை தற்போது அவர் வெளிப்படையாக கூற வேண்டும்”என்றும் சரமாரியாக கேள்விகளை அடுக்கியுள்ளார்.

“பா.ஜ.க உடன் கூட்டணி சேர்ந்து முழு சந்திரமுகியாக அதாவது முழு சங்கியாகவே மாறி உள்ளார் பழனிச்சாமி. கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்கிறார்கள் ஆனால் எல்லாக் கட்சியும் பா.ஜ.க உடன் தான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மாப்பிளை அவர் தான் ஆனால் அவர் போட்டுள்ள சட்டை என்னுடையது என சூப்பர் ஸ்டார் பட காமெடி போல் அவர்கள் கூட்டணி உள்ளது” எனவும் "ஊழல் புகார்களில் இருந்த, ரெய்டுகளிலிருந்தும் தப்பிக்க மொத்த கட்சியையும் பா.ஜ.க உடன் அடகு வைத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. நேரடியாக தமிழ்நாட்டிற்குள் வந்தால் பா.ஜ.கவை நோட்டாவுக்கு கீழ் அனுப்பி விடுவார்கள் எனவே அதிமுக முகமூடி அணிந்து வந்துள்ளார்கள். பிரதமரால் தமிழ்நாட்டிற்கு இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம் என கூற முடியவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். தமிழ்நாடு எப்படி தலை நிமிர்ந்து உள்ளது என பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் தங்கி இருந்து தெரிந்து கொள்ளட்டும். என்.டி.ஏ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றக்கூட தயங்க மாட்டார்கள்” என்றும், பாஜக வையும்  விட்டு வைக்காமல் சரமாரி கேள்விகளால் விளாசியிருந்தார் ஸ்டாலின்.

இறுதியாக “நம் எதிரிகளையும் உதிரிகளியும் வீழ்த்த வேண்டும். டப்பா என்ஜின் முன் நம் சூப்பர் பாஸ்ட் என் ஜின் ஒரு போதும் தலைகுணியாது. டெல்லி அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்” என்றும் தனது பிரச்சார உரையை  முடித்து வைத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.