திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் (24) ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட சுர்ஜித், அவரின் தாய், தந்தை மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது காவலர்களான சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை மீதான குற்றப்பத்திரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு கவினின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர் மாற்று சமூக பெண்ணை காதலித்த விவகாரத்தால் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். கவின் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோரும் காவலர்களுமான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, நீதிபதி ஆர். விஜயகுமார் அவர்களின் மீதான குற்றப்பத்திரிகையை செப்டம்பர் 29-ம் தேதி ரத்து செய்தார். நீதிமன்றதின் இந்த உத்தரவை எதிர்த்தும், தமிழக அரசு இந்த உத்தரவை மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கவின் குடும்பத்தினர் ஆறுமுகமங்கலத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கவின் புகைப்படத்தை கையில் ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“இவ்வளவு நாட்களாக நாங்கள் போராடியது எதற்காக? போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றப்பத்திரிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்படியானால், எங்களுக்கான நீதி எங்கே?” என கவினின் தாய் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கவினின் தாய் கூறுகையில், “என் பிள்ள ஒரு பெண்ணை விரும்பியதற்காக இப்படி கொலை செய்ய வேண்டுமா? இது நியாயமா? ஒரு தாயாக என் மகனை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்பது எனக்குத்தான் தெரியும். இனி இதுபோன்ற சம்பவத்தில் மற்றொரு கவின் பலியாகக் கூடாது” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், “ஆதாரங்கள் இல்லை என்றால் ஆரம்பத்தில் கைது நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும். விசாரணை முழுமையாக நடைபெறாமல் குற்றப் பத்திரிக்கை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு முறையான விளக்கம் வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
"வழக்கில் தொடர்புடையவர்கள் காவல்துறை அதிகாரிகளாக இருப்பதால், அவர்களின் பங்கு குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார். வழக்கில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக நீங்கள் கருதும் சம்பவங்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. நாங்கள் நீதி, நேர்மையை தான் நம்புகிறோம். நீதியின் அடிப்படையில் தான் இதுவரை போராடி வருகிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில், எங்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய விளக்கம் கிடைக்க வேண்டும்” என கவினின் தாய் தெரிவித்துள்ளார்.
அதைதொடர்ந்து, “தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்து, வழக்கில் தேவையான மேலதிக விசாரணை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை வெளிவந்து என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு கவினை இழந்துவிட்டோம். இனி மற்றொரு கவின் இதுபோன்ற சம்பவத்தில் உயிரிழக்கக் கூடாது. என் மகனுக்கு நடந்தது இதோடு முடிய வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
“நீதி மட்டும்தான் ஜெயிக்கும்னு நெனச்சிட்டு இருந்தோம். விசாரணையே இல்லாம எந்த உலகத்துலயாவது தீர்ப்பு கொடுப்பாங்களா? வழக்கில் இருந்தே விடுதலை ஆவது போல் தீர்ப்பு கொடுத்திருக்காங்க. நாங்க இவ்ளோ போராடி என்ன செய்ய.. கடைசில ஆணவக்கொலையே இல்லைனு சொல்லப்போறாங்களா? எந்த சட்டத்தை வச்சு அவங்க ரெண்டு பேரையும் விடுவிச்சாங்கனு எங்களுக்கு தெரியணும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்