கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று விசாரணை தொடங்கியுள்ள நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் தேவையான ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும், அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினர் மற்றும் மாணவ அமைப்புகள், குற்றச்சாட்டப்பட்ட தவெக MLA-வை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், கார்த்திக் சிதம்பரம் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.53.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியார் அறிவுலக புத்தக ஊழல், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மற்றும் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீதான வழக்கு குறித்து பேசியிருந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் குறித்து அவர் பேசியதாவது, “கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பொதுவாக எல்லாத்திற்கும் கைது நடவடிக்கை என்பதிலும் தொட்டதுக்கெல்லாம் கைது என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஒருவர் மற்றொருவருக்கு அச்சுறுத்தலாக இருப்பார், சாட்சியைக் கலைப்பார் என்றாலோ, உயிருக்கோ அல்லது உடமைக்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்துவார் என நிலை இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி கைது என்பது என்னைப் பொறுத்தவரை தேவையில்லாத விசயம் என்று பேசியிருந்தார். இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை இல்லாமல் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தரவேண்டும்.
இதற்கு முன் கடந்த 18ம் தேதி இந்த விவகாரம் குறித்து பேசியிருந்த அவர் “மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமல் யார், யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்புவது, கோவிலில் தீபம் ஏற்றுவது குறித்து அரசியல் பேசுவது வேதனையாக உள்ளதாக” தெரிவித்திருந்தார். மேலும், “முதல்வர் மற்றும் சில அமைச்சர்களை தவிர, தவெக எம்எல்ஏக்களை எனக்கு தெரியாது” என்றும் அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு, இன்று காலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி நேரில் சம்மன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, தற்போது தனது இல்லத்தில் வழக்கறிஞர் குண திலீபனுடன் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். போலீசாரின் சம்மனைத் தொடர்ந்து அவர் விசாரணைக்கு ஆஜராகிறாரா? இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அவரை கைது செய்ய கோரி, சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக MLA-வை கைது செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்திற்கு புகார் அளிக்க நேரில் வந்திருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்