“மீண்டும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபம்” - கொந்தளித்த பக்தர்கள்.. திருப்பரங்குன்றத்தில் போராட்டம்!

இருப்பினும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டது...
“மீண்டும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபம்” - கொந்தளித்த பக்தர்கள்.. திருப்பரங்குன்றத்தில் போராட்டம்!
Published on: 
Updated on: 
2 min read

மதுரை திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வழக்கம்போல் இந்த முறையும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தூணிலேயே திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள் தீபத்தூண் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதனால், மதுரையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் கவனம் பெற்றது. இந்த நிலையில், திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சரியாக மாலை 6 மணிக்கு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மூலவருக்கு பால தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலை மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா அல்லது வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் தொடர்ந்து நிலவியது. இதற்கிடையே, மதுரை மாநகர காவல் ஆணையர், வருவாய்த்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் திருக்கோவில் அலுவலர்கள் மலைக்குச் சென்றனர்.

மலை உச்சியில் உள்ள தீபத்தூண் அருகிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதனால், தீபத்தூண் அருகே காத்திருந்த பக்தர்கள் அதிருப்தியடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்து முன்னணி மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை தீப நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர். தீப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழிசை சௌந்தரராஜனை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கையில் வேலுடன் வந்திருந்த தமிழிசை, தான் ஒரு பக்தராகவே கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், பக்தராக திருப்பரங்குன்றம் செல்லக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பினார்.

தன்னைத் தடுப்பதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீசார் அவரைக் கைது செய்து மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைத்ததாகத் தகவல் வெளியானது. இதேபோல், திருப்பரங்குன்றம் தீப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனையும் போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்வதாகக் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் போலீசார் அதனை ஏற்கவில்லை என்றும் கூறினார். மேலும், 144 தடை உத்தரவு திருப்பரங்குன்றத்திற்குத்தானே என்று கேள்வி எழுப்பிய அவர், தனது தனிமனித உரிமை மீறப்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்த நிலையில் தற்போது வழக்கம் போல உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்