நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த கள் இயக்க தலைவர் நல்லசாமி, தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது பயனற்ற திட்டங்களுக்கு தவெக அரசு செலவு செய்வதாகவும், இந்த செயல்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதற்கு சமமானது என்றும் தெரிவித்துள்ளார். காலநிலை நீர் ஆதாரம் போன்றவற்றிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி நீரை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பங்கேற்ற கள் இயக்க தலைவர் நல்லுசாமி சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள லட்சுமி அரங்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கள்ளுக்கான தடை நியாயமானது என நிரூபித்தால் கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் கள்ளுக்கான தடை நியாயமானது என்று நிரூபிங்க 10 கோடி ரூபா தருகிறேன். தேவையற்ற இலவச திட்டங்களால் தமிழ்நாடு பின்னோக்கி தான் செல்லும் என்ற அவர் தொலைநோக்கு பார்வையில் சிந்தித்து தவெக அரசு செயல்பட வேண்டும் என்று நல்லசாமி வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், நயன்தாராவையோ, திரிஷாவையோ அல்லது கீர்த்தி சுரேஷையோ எங்க இயக்கத்துக்கு தலைவியா வச்சிருந்தோம்னா எப்பவோ ஜெயிச்சிருப்போம் என்று விமர்சித்தார். அதையடுத்து தமிழக அரசியல் ஒரு சினிமா மோகம்.. இன்னைக்கு இவருக்கு மாற்று 2 பேரு அப்படியே கொம்பு சீவிட்டு இருக்காங்க. தனுஷ், சிவகார்த்திகேயன் இப்போ சூர்யாவுக்கும் அரசியல் ஆசை வந்துடுச்சு என்று குறிப்பிட்டுள்ளார். 1967-ல் இருந்து நடிகர்களே நாடாளுகிறார்கள், அப்புறம் எதற்கு தமிழ்நாடு என்று பெயர்.. நடிகர்கள் நாடு என்றே மாற்றி கொள்ளலாம் என்று காட்டமாக விமர்சித்தார்.
காவிரி நீர் பிரச்சனையில் அமைச்சர் ஆனந்துக்கு எந்தவித புரிதலும் இல்லை என்ற அவர், “நானும் புஸ்ஸி ஆனந்த் கிட்ட சொல்லி பார்த்த. அவருக்கு புரிதலே இல்ல, அவர் ஒரு வெள்ளை தாள். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெள்ளை தாள், அமைச்சர் பெருமக்கள் வெள்ளை தாள், முதலமைச்சர் ஒரு வெள்ளை தாள் என்று தவெக அரசை கடுமையாக சாடினார். 28 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் என்ன புரிதலோட இந்த வழக்கை எடுத்து தமிழக அரசு நடத்தி இருக்கீங்க? இத கேட்கக்கூடிய சக்தி தவெக-வுக்கு இல்ல. எல்லாம் சினிமா மோகம் சட்டப்பேரவையில பாட்டுக்கு பாட்டு பாடுறாங்க, இனி அடுத்து என்ன நடக்கும் தெரியுங்களா இசைத்தட்டு நடனம் ரெக்கார்டன்ஸ் அது நடக்கும் என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்