அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் என அங்கு வசித்துவரும் மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தமிழக அரசு இடித்து வருகிறது.
அரசின் இந்த செயலுக்கு மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சிங்கார சென்னை 2.0 என்ற பெயரில் ஏற்கனவே ஆர்.ஏ புரம் குடியிருப்பை ஒழித்ததில் ‘கண்ணப்பன்’ என்ற தொழிலாளி தீக்குளித்து இறந்தார். அந்த சோகத்தின் சாயலே மறையாத நிலையில் ஆண்டு தோறும் ஒரு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இங்குள்ள அனைத்து ஆளும் அரசாங்கங்களும் சென்னையில் பூர்வ குடிமக்களை இங்கிருந்து துரத்துகிறது.
இவர்கள் தரும் மாற்று குடியிருப்புகளும் ஒழுங்காக இருப்பதில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “மாவீரன்” படமே இதற்கு சான்று. கே.பி.பார்க் குடியிருப்பில் செதில் செதிலாக பெயர்ந்து விழுந்த சுவர்களை நாம் கண்டோம். இதை பொறுக்க முடியாமல் அந்த மக்கள் போராடினால் அதையும் இந்த அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது.
இந்த நிலையில் அதிர்ச்சிகரமான மற்றொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் பகுதிகளில் உள்ள கடற்கரையை ஆக்கிரமித்து விதிகளை மீறி, பங்களாக்கள் கட்டுப்பட்டுள்ளது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையின் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது.
இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், திருப்போரூர் தாசில்தார், கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை ஆணையம், முட்டுக்காடு பகுதியில் விதிமீறல் உள்ளதா என நேரில் ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
“நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடிசைகள் கட்டக்கூடாது, ஆனால் பங்களாக்கள் மட்டும் கட்டிக்கொள்ளலாம்” 50 வருடங்களுக்கு மேலாக வாழும் ஒரு மக்கள் கூட்டத்தை அவர்கள் குடியிருப்பிலிருந்து பெயர்த்து வேறெங்கோ தூக்கி போடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்.
மக்களின் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து போராடி வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனகாபுத்தூர் இந்த அழுகைக்கு யார் பொறுப்பேற்பது?
2008ல் பட்டா தருவதற்கு திமுக ஆட்சியில் ரசீது தருகிறார்கள்.
2016ல் ஆக்கிரமிப்பென அதிமுக ஆட்சியில் ரசீது தருகிறார்கள்.
2023ல் ஆற்றின் கரையென்று, வரைபடத்தை திருத்தி வீடுகளை இடிக்க திமுக ஆட்சியில் உத்தரவு வாங்குகிறார்கள்.
2025ல் இடிக்கிறார்கள்.
2020 வரை ஆக்கிரமிப்பாக இருந்த நிலத்தில் திடீரென 2023ல் முளைக்கிறது காசாக்ராண்ட் கம்பெனி. ஆற்றிற்குள் 10 அடுக்கு மாடியை கட்டுகிறார்கள். இதற்கு எதிர்கரையைத் தான் இடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அடுக்கடுக்காய் காசாக்ராண்ட் கம்பெனியின் வீடுகள் கட்ட அனுமதி எப்படி கிடைத்ததென திமுக ஆட்சியாளரும் கேள்வி கேட்கவில்லை, எதிர்கட்சியினரும் பேசவில்லை. பொதுமக்களும், சனநாயக சக்திகளும் போதுமான அளவில் பேசவில்லை. அநீதிக்கு எதிராக அமைதிகாத்து 'திராவிட மாடலை' காப்பாற்றி விட முடியுமா?
உழைத்து சேகரித்த வீட்டை பாதுகாத்துத் தர இயலாதா திமுக அரசால்? இவ்வீடுகளை இடிப்பதால் யாருக்கு பலன்? கார்ப்பரேட் நலன்களை காப்பதற்கா 'திராவிடமாடல்'?
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்