தமிழ்நாடு

பெரம்பலூரில்.. திமுகவின் கோட்டையைத் தகர்க்குமா அதிமுக? 4 சதவீத வித்தியாசத்தில் அனல் பறக்கும் போட்டி!

திமுக 37 சதவீத வாக்குகளைப் பெற்று மிகவும் கம்பர்ட்டபிளாக முன்னிலை வகிக்கிறது

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டம், சோழ மண்டலத்தின் நுழைவாயிலாகப் பார்க்கப்படுகிறது. 76 சதவீத கிராமப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், சின்ன வெங்காயம் மற்றும் பருத்தி விவசாயிகளின் கோரிக்கைகளே தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.

பெரம்பலூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 36.8 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 30 சதவீதமும் உள்ளனர். 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 14.5 சதவீதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக ரீதியாக ஆதிதிராவிடர்கள் 35 சதவீதத்தோடு பெரும்பான்மை வகிக்கிறார்கள். உடையார்கள் 30 சதவீதமும், வன்னியர்கள் 5 சதவீதமும் உள்ளனர். விவசாயம் சார்ந்த இந்தத் தொகுதியில், ஆதிதிராவிடர் மற்றும் உடையார் சமூக வாக்குகளே ஆட்சியாளரைத் தீர்மானிக்கின்றன.

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகச் சின்ன வெங்காயத்திற்கு நிலையான விலை கிடைக்காதது மற்றும் விளைபொருட்களைச் சேமிக்கப் போதிய வசதிகள் இல்லாதது சுட்டிக்காட்டப்படுகிறது. பருத்தி விவசாயிகளுக்குப் கொள்முதல் நிலையங்கள் போதிய அளவில் இல்லை என்பதும், நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாததும் மக்களின் பெரும் அதிருப்திக்குக் காரணமாக உள்ளது. பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் நிலவும் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து முடக்கம் பெரம்பலூர் மக்களின் நீண்ட காலப் புகாராகும்.

பெரம்பலூர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 50.7 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 53.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 37.8 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 34.1 சதவீதமாகச் சரிந்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 120 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் 150 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 97 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 101 பூத்களாகத் தக்கவைத்துள்ளது. சுமார் 34 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, பெரம்பலூரில் திமுக 130 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 100 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 80 வாக்குச்சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறக்கூடிய ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 32 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 37 சதவீத வாக்குகளைப் பெற்று மிகவும் கம்பர்ட்டபிளாக முன்னிலை வகிக்கிறது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 25 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 4 முதல் 5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.