தேர்தல் நெருங்கஇன்னும் 8 மாதங்கள் இருக்கக்கூடிய சூழலிலே அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் வியூகத்தை துவங்கிவிட்டன. அதிமுக -திமுக என்ற நிலையை மாற்ற விஜய் -ம் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். பிரதான கட்சிகளின் வெற்றியே கூட்டணிக்கட்சிகளை நம்பித்தான் இருக்கிறது. அத்தகைய ஒரு சூழலில் பாமக -உடன் திமுக கூட்டணி ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை துணை முதல்வர் உதயநிதியே ஏற்படுத்தியிருக்கிறார்.
சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3500 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கினார்.
அந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கூட்டணியில் இல்லாத இரண்டு எம்எல்ஏக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றாக அரசு திட்டங்களை பாராட்டினார்கள். இதேபோல் எப்போதும் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர்கள் கூட்டணியில் இப்போது இல்லை என்று பாமக எம்.எல்.ஏ-க்கள் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது பாமக கூட்டணியில் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது, ஏற்கனவே கூட்டணியில் இருந்ததை சொன்னாரா? அல்லது இனி வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளது என சூசகமாக தெரிவித்தாரா? என அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக எம்.எல்.ஏ அருள், அரசு விழாவில் திமுக அரசை பாராட்டி பேசவில்லை தனது தொகுதியின் தேவைகள் குறித்து தான் பேசினேன் எனவும் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சாலை வசதி குடிநீர் வசதி முறையாக இல்லாததால் ஏற்கனவே ரூ.100 கோடி நிதி கேட்டு உள்ளதாகவும் இதில் சிறப்பு நிதியாக துணை முதலமைச்சர் 50 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் “பாமக எம்.எல்.ஏ -க்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து” என தெரிவித்த அவர் கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே திமுக கூட்டணியில் பாமக இருந்ததை தான் அவர் சுட்டிக் காட்டி பேசினாரே தவிர தற்போது கூட்டணி குறித்து பாமக தலைவர் ராமதாஸ் தான் முடிவு எடுப்பார் என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.