
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 77 -வது பிரைம் டைம் எம்மி விருது விழாவில் 15 -வயது சிறுவன் ஒருவன் கையில் விருதுடன் தலையை தேய்த்தபடி நின்ற புகைப்படம் நிச்சயம் இணையவாசிகளின் கண்களில் பட்டிருக்கும். ஹாவியர் பார்டம், பில் காம்ப், ராப் டெலேனி, பீட்டர் சார்ஸ்கார்ட் உள்ளிட்ட சீனியர் நடிகர்களுக்கு மத்தியில் ‘சிறந்த துணை நடிகருக்கான’ விருதை ‘Adolescence’ - என்ற ஆங்கில தொடருக்காக தட்டிச் சென்றுள்ளார், 15 வயதான ஓவன் கூப்பர்.
பிரைம் டைம் எம்மி விருதை இவ்வளவு இளம் வயதில் யாருமே வென்றதில்லை என்ற அரிய வரலாற்றை படைத்திருக்கும் கூப்பருக்கு 2 வருடங்களுக்கு முன்பு வந்த வாய்ப்புதான் ‘Adolescence’ 2025 -ன் மிகச்சிறந்த ஆங்கில தொடர் என இந்த சீரீஸுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறது ‘The Guardian’ பத்திரிக்கை.
கடந்த மார்ச் 13 -ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது Adolescence. சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களான, ஜேக் த்ரோன், ஸ்டீபன் கிரஹாம் திரைக்கதையில், பிலிப் பரண்டினி இயக்கத்தில் உருவான இந்த 4 மணி நேர சீரிஸ் முழுக்க முழக்க சிங்கிள் ஷார்ட் -ல் உருவாக்கப்பட்டது. Adolescence -ல் நாம் வியக்கும் ஒரு அம்சமும் இதுதான்.. நமக்கு தண்டனையான அம்சமும் இதுதான். போலீஸ் ஒரு வீட்டினுள் புகுந்து 13 வயதான ‘ஜேமி’ என்ற சிறுவனை துப்பாக்கி முனையில் பெற்றோர் கண்முன்னே கைது செய்து அழைத்துவரும் காட்சிகள் அனைத்தும் உங்களுக்கு சிங்கிள் ஷார்ட் -ல் காண்பிக்கப்பட்டிருக்கும். இந்த சீரிஸை நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கு மூச்சுவிட முடியாத ஒரு அழுத்தமான, இறுக்கமான நிலையைக் கூட உணரலாம்.
உடைந்த மனதுடன் மகனையும், குடும்பத்தையையும் காப்பாற்ற போராடும் ஒரு அப்பாவாக வலம் வருகிறார் இந்த தொடரின் கதையாசிரியரும் , தயாரிப்பாளர்களின் ஒருவருமான ஸ்டீபன் கிரஹாம். ‘ஜேமி -யின் அப்பா எடி மில்லராக ஸ்டீபன் நடித்திருப்பார். பிளம்பர் -ஆக வேலை செய்யும் எடி தன் குழந்தைகளை நம்பும், தன் குழந்தைகளுக்காக எதையும் செய்யக்கூடிய ஒரு சாதாரண அப்பா. தொடரின் பல இடங்களில் ஜேமி -யை விட எடி -யை பார்க்கும்போதுதான் நாம் ‘emotional’ -ஆக மாறுவோம். அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கடைசி காட்சிகளில் நட்சத்திரங்களாலும், விண்வெளி வீரராக வேண்டுமென்ற கனவுகளாலும் நிறைந்திருக்கும் , ஜேமியின் அறையில் அந்த சின்ன ‘டெடி பியரை’ கட்டி அணைத்து அழும் காட்சிகளெல்லாம் உங்களையே அறியாமல் உங்கள் தொண்டை அடைக்கும். ஆனால் அத்துணை ஆற்றாமைகளையும் சுமந்து, தன் மகனால் கொல்லப்பட்ட சிறுமியின் படத்தின் முன் மன்னிப்போடும், வருத்தத்தோடும் மலர்களை ஏந்தி நின்ற காட்சிகளில் மனிதத்தன்மையை மிக இயல்பாக சமன் செய்திருப்பார் கிரஹாம். இவருக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் நடிகருக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
13 வயது ஜேமி சக பள்ளித்தோழியை பலமுறை குத்தி கொல்லும் காட்சிகளை பார்த்த பின்னர், அப்பாவும் மகனும் உடைந்து அழும் காட்சியை மிக அற்புதமாக உருவாகியிருப்பார்கள். முதல் எபிசோடில் ஆயுதம் ஏந்திய போலீஸ்காரர்களை பார்த்து பயத்தில் படுக்கையை நனைக்கும் 13 வயது சிறுவன் ஜேமிதான் 3 -ஆவது எபிசோடில் மிக கோவமான, ஆக்ரோஷமான ‘ஒரு ஆணாக’ மாறி மிரட்டியிருப்பார். வளரிளம் பருவதிற்கே உரித்தான வசீகரத்தை கூப்பர் அழகாக திரையில் பிரதிபலித்தார்.
இணையத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களாலும், சமூகத்தில் பெருகி வரும் ‘ஆணாதிக்க’ மன நிலையாலும் பாதிக்கப்பட்டு குற்ற செயலில் ஈடுபடும் சிறுவனான ஜேமி, தான் செய்தது தவறு என்று உணரும் தருணத்தில்தான் சீரிஸ் முடிவை நெருங்குகிறது.
உலகம் முழுவதும் பெருகிவரும் Femicide -ன் தாக்கத்தை இந்த தொடர் காண்பித்துள்ளது. மேலும் வளரிளம் பருவத்தினர் வீட்டில் கணினியோடு செலவழிக்கும் நேரங்களை பாதுகாப்பான, ஆபத்தில்லாத ஒன்றாக பெற்றோர் கருதும் வேளையில்தான் ஜேமி போன்ற சில சிறார்கள் இணையத்தில் தவறாக வழிநடத்தப்படுவதை கவனிக்க மறக்கின்றனர். இணையம் முழுக்க பாலியல், உருவ கேலி, ஆணாதிக்க, சமூக பாகுபாடுகள் நிறைந்த கன்டென்ட் -கள் வலம் வருகின்றன. அவற்றை முறைப்படுத்தி பார்க்கும் தன்மையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது வெறும் பெற்றோரின் கடமை மட்டுமல்ல அது சமூகம் சார்ந்த ஒரு செயல்பாடாக இருக்க, மாற வேண்டும். ஏனெனில் மாற்றம் என்பது தனிமனிதனிடம் இருந்து மட்டும் உருவாவது அல்ல.. ஒட்டுமொத்த சமூகத்திடமிருந்து வெளிப்படவேண்டியது. இதனை அடிப்படையாக கொண்டே சீர்திருத்தம் நிகழக்கூடும். ஜேமி -யின் சகோதரியாக நடித்திருக்கும் எமிலி பீஸ் -தான் தன்மையான, அமைதியான குணத்தால் உடைந்து பலவீனமடைந்த தனது குடும்பத்திற்கு வடிகாலாக மாறியிருப்பார்.
வழக்கை விசாரிக்கும் காவலராக வரும் ஆஷ்லீ வால்டர்ஸ் வெகு லாவகமாக தனது கதாபாத்திரத்தை செய்திருப்பார். கறுப்பினத்தவரான ஆஷ்லீ, ஜேமி படித்த அதே பள்ளியில் படிக்கும் தனது மகனுக்கு பள்ளியில் நடக்கும் நிற வேறுபாட்டை நேரடியாக காண்கிறார், வேலையிலே முழுநேரம் மூழ்கிக்கொண்டு இருக்கும் ஆஷ்லீ -க்கு மகனின் பள்ளிச்சூழலை கண்டதும், மகனோடு அவர் இருக்க முயலும் பிரயத்தனங்களை முதிர்ந்த கலை பண்போடு கையாண்டிருப்பார்.
மன நல ஆலோசகராக வரும் ஈரின், ஜேமி மில்லர்க்கு மட்டுமல்லாது பார்க்கும் நம் அனைவருக்கும் பிடித்த பெண்ணாக மாறுகிறார். ஈரின் -க்கும் ஜேமிக்கும் இடையிலான காட்சிகள் முழுக்க முழுக்க உரையாடலாகவே இருந்தாலும் கூட, 3 -வது எப்பிசோடில் தனக்குள் இருந்த குழந்தைத்தன்மையை நீக்கி கொலைக்குற்றத்திற்கு துணிந்த ‘ஜேமியை’ நாம் காணலாம். எதிர் பாலினத்தால் புறக்கணிக்கப்பட்ட சிறுவனிடம் இருந்த ஆற்றாமையையும், வன்மத்தையும் நீக்கி அன்பு நிறைந்த பெண்ணாக ஈரின் நடித்திருப்பார். ஜேமிக்கும் ஈரின் -க்குமான கடைசி செஷன் ஒன்று இருக்கும் அப்போது ஜேமி ‘உங்களுக்கு என்னை பிடித்திருக்கிறதா? என கேட்பார், ஆனால் ஈரின் அமைதியாக இருப்பார், ஆனால் ஜேமி விடாமல் கேட்டுக்கொண்டே இருப்பார், ஆனால் போலீஸ் ஜேமியை அங்கிருந்து அழைத்துச்சென்றுவிடுவார், அதன் பின் தோன்றும் அமைதியில் ஜேமியின் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். திரையில் ஓவன் கூப்பர் ஏற்படுத்திய இத்தகைய தாக்கங்கள் தான் அவரை மிக இளம் வயது விருத்தாளராக மாற்றியிருக்கிறது.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த தொடரில் பாதிக்கப்பட்டவரின் கண்ணியம் (Viticm’s Dignity) காக்கப்பட்டிருக்கும். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், மிகப்பொறுப்போடு எடுக்கப்பட்ட ஒரு தொடர்.
நமது தமிழ் சினிமாக்களில் வருவதை போல, பெண்ணை கொல்லும் அல்லது பாலியல் வல்லுறவு செய்யும் காட்சியை, திரும்ப திரும்ப போட்டு, Objectify -செய்து அதில் தங்கள் கலைநயத்தை காட்ட நினைக்காமல் மிக சிறப்பாக படமாக்கி இருப்பார்கள்.
ஜேமி கேட்டி -யை கொல்லும் சிசிடிவி -காட்சிக்கூட ஜேமியின் அப்பாவான எடி மில்லர் -க்கு தான் காட்டப்படும். audience -ஆன நமக்கு காட்டியிருக்க மாட்டார்கள். இம்மாதிரியான கதைகளை காட்சிப்படுத்தும்போது இத்தகு கண்ணியமும், பொறுப்புணர்வும் மிக அவசியம். Adolescence -குழு அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறது என்றே சொல்லலாம். நடந்து முடிந்த எமி விருது விழாவில் Adolescence சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், துணை நடிகர் உட்பட 6 எம்மி விருதுகளை தட்டிச்சென்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.